மரண தண்டனை கூடாது

மரண தண்டனை கூடாது - சட்ட ஆணையம் பரிந்துரை
விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது!
தொல்.திருமாவளவன் அறிக்கை
  உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஒன்பது நபர்கள் அடங்கிய சட்ட ஆணையம் மரண தண்டனை குறித்து ஆய்வறிக்கை ஒன்றை 31.8.2015 அன்று மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில் பயங்கரவாதம் மற்றும் தேசத்துரோகம் அல்லாத பிற குற்றங்களுக்கு மரண தண்டனை கூடாது எனப் பரிந்துரை செய்துள்ளது.  இக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் மரண தண்டனைக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர்.  பெரும்பான்மையாக ஆறு உறுப்பினர்கள் ஆதரவோடு இந்த அறிக்கையை இந்திய அரசிடம் சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஏ.பி.ஷா அளித்துள்ளார். இது மனித உரிமை ஆர்வலர்களின் நெடுநாள் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.  முழுமையாக மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென்பதுதான் மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.  எனினும் பயங்கரவாதம் மற்றும் தேசத்துரோகம் அல்லாத பிற குற்றங்களுக்கு மரண தண்டனை கூடாது எனப் பரிந்துரைத்தது மிகுந்த வரவேற்புக்குரியாகும்.  1982இல்  மரண தண்டனை நடைமுறையில் இருக்கவேண்டும் எனப் பரிந்துரைத்த சட்ட ஆணையம், தற்போது  தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
ஐ.நா. மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள 195 நாடுகளில், 136 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன.  ஆனால் இந்தியா உள்ளிட்ட 59 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது.  1937ஆம் ஆண்டிலேயே மகாத்மா காந்தியடிகள், “மரண தண்டனை என்பது அகிம்சைக்கு எதிரானது. அரசு கொலையாளியை மனந்திருந்தச் செய்வதற்கான வழிகளைத்தான் பின்பற்ற வேண்டும்.  குற்றங்கள் என்பவை நோய்களைப் போன்றவை.  அதனால், பீடிக்கப்பட்டவர்களை நோயாளிகளாகக் கருதி வைத்தியம் செய்வதே சரியானதாகும்” என்று கூறியுள்ளார்.  குற்றமிழைத்த ஒருவருக்கு வழங்கப்படுகின்ற தண்டனையின் நோக்கம் அவர் மீண்டும் அந்தக் குற்றத்தைச் செய்யாமல் தடுப்பது மட்டுமல்ல, அவரைத் திருத்துவதும்தான்.  தவறு செய்த ஒருவரைப் பழி வாங்குவதற்கும் அவரைத் தண்டிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், "உச்சநீதி மன்றத்துக்கு மேல்முறையீடு செய்வதை விடவும் மரண தண்டனையை முற்றிலும் ஒழிப்பதைத்தான் நான் ஆதரிப்பேன்.  நமது நாடு அகிம்சையைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்ட நாடாகும்.  நடைமுறையில் அதை முழுமையாக பின்பற்றவில்லை.  ஆனாலும் மரண தண்டனையை முற்றிலும் ஒழிப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.  அம்பேத்கரின் கருத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட அரசியல் நிர்ணய சபை மரண தண்டனையை ஒழிப்பதா? வேண்டாமா? என்று முடிவு செய்யும் அதிகாரத்தை எதிர்கால நாடாளுமன்றத்திடம் விட்டு விடுவது எனத் தீர்மானித்தது.
இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் தொடர்ந்து போராடி வருகிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 12.8.2011 அன்று அறிக்கை வாயிலாக மைய அரசுக்கு, ‘பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.  மரண தண்டனையை முற்றாக ஒழிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தது.  அத்துடன் 28.8.2011 அன்று மறைமலைநகரில் இலட்சம் மக்கள் பங்கேற்ற  ‘மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டை’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைத்தது.
உலகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென்று போராடி வருகிற நிலையில், அனைத்து நாடுகளும் மரண தண்டனையைக் கைவிட வேண்டும் என ஐ.நா. மன்றமும்  வலியுறுத்தி வருகிற  இச்சூழலில் இந்திய சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, நாடாளுமன்றத்தில் விவாதித்து, மரண தண்டனையை முற்றாகக் கைவிட சட்டமியற்ற  வேண்டுமென்றும் இந்த நாட்டில் சட்டத்தின் பெயரால் இனி ஓர் உயிரைப் பறிப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்திய அரசை வலியுறுத்துகிறது.

இவண்
தொல்.திருமாவளவன்

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்