சுய ஒழுக்கமே ஞானம்

ஒரு சமூகத்தை வழிநடத்த விரும்புகிறவன், முதலில் தன்னைத்தானே வழிநடத்தக் கற்றிருக்க வேண்டும். 

தன் வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாதவன், பிறருக்கு வழிகாட்ட முயல்வது ஒரு அடிப்படை முரண்பாடு. இதனால்தான் 
“தன்னைத்தானே வழிநடத்த அறிந்தவனே அடுத்தவருக்கு வழிகாட்டத் தகுதியானவன்” என்ற சிந்தனை, வெறும் நெறிப்போதனை அல்ல, அது சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளம்.

இன்றைய காலத்தில் வழிநடத்தல் என்றால் அதிகாரம், பதவி, மேடை என்று நினைப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் உண்மையில் வழிநடத்தல் என்பது கட்டளை இடுவது அல்ல, 
வாழ்க்கையின் வழியாக பாதை அமைத்துக் காட்டுவதே. ஒருவர் சொல்வதை விட, அவர் வாழும் முறைதான் பிறரின் மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தன்னைத்தானே வழிநடத்துதல் என்பது வெளியில் இருந்து விதிக்கப்படும் கட்டுப்பாடு அல்ல. அது மனிதன் தன் மனதோடு நடத்தும் நேர்மையான உரையாடல். “நான் செய்வது நியாயமா?”, “என் சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையே நேர்மை இருக்கிறதா?”, “எனக்கு கிடைத்த அதிகாரம் பிறரை பாதிக்கிறதா?” போன்ற கேள்விகளைத் தன்னிடம் தொடர்ந்து கேட்கும் துணிவே சுய வழிநடத்தலின் தொடக்கம்.
சுய விமர்சனம் இல்லாத இடத்தில் சுய ஒழுக்கம் உருவாகாது. சுய ஒழுக்கம் இல்லாத இடத்தில் ஞானம் வெறும் சொல்லாகவே மிஞ்சும்.

பலர் சுய ஒழுக்கத்தை அடக்குமுறையாகப் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் உண்மையில் சுய ஒழுக்கம் என்பது மனிதன் அடையக்கூடிய உயர்ந்த சுதந்திரம். தன் ஆசைகளுக்கு அடிமையாக இருப்பவன் சுதந்திரன் அல்ல, தன் கோபத்திற்கு அடிமையாக இருப்பவனும் சுதந்திரன் அல்ல. “என்னால் செய்ய முடியும்; ஆனாலும் நான் செய்யமாட்டேன்” என்று சொல்லும் மன உறுதியே உண்மையான சுதந்திரம்.

அறிவும் ஞானமும் ஒன்றல்ல. அறிவு புத்தகங்களால் கிடைக்கலாம்; தகவல்களால் பெருகலாம். ஆனால் ஞானம் அறிவுடன் சுய ஒழுக்கம் இணையும் போதுதான் பிறக்கிறது. 

சுய ஒழுக்கமில்லாத அறிவு சமூகத்திற்கு பயன் தருவதற்குப் பதிலாக, அதற்கு ஆபத்தாக மாறும். வரலாறு இதற்குப் பல சான்றுகளை முன்வைக்கிறது.

இன்றைய அரசியல் சூழலில் மிகப்பெரிய குறைபாடு சுய ஒழுக்கத்தின் பற்றாக்குறையே. சுய ஒழுக்கமில்லாத அரசியல் அதிகாரத்தைச் சேர்க்கும், ஆனால் பொறுப்பை ஏற்காது. அது மக்களை சிந்திக்க வைக்காது, அவர்களைப் பின்தொடரச் செய்வதிலேயே திருப்தி அடையும். கொள்கைகள் பேசப்படும், ஆனால் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படாது.

உண்மையான வழிகாட்டுதல் உபதேசம் அல்ல. அது வாழ்ந்து காட்டுதல். மனிதர்கள் பேச்சால் குறைவாகவே மாறுகிறார்கள், வாழ்க்கை முறையால் அதிகமாக மாறுகிறார்கள். சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையே இடைவெளி இல்லாத மனிதனே உண்மையான வழிகாட்டி. அவன் மேடை ஏறாமலேயே, அதிகாரம் இல்லாமலேயே சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்.

இயக்கங்களும் அமைப்புகளும் பல நேரங்களில் வெளி எதிரிகளால் அல்ல, அவற்றின் உள்ளே உருவாகும் ஒழுக்கக் குறைபாடுகளால் தான் சிதைகின்றன. பொறுப்பற்ற தலைமை, சுய விமர்சனத்தை ஏற்க மறுக்கும் மனநிலை, தனிப்பட்ட ஆசைகளுக்கு இடம் கொடுக்கும் பண்பாடு   இவை எல்லாம் சமூக முயற்சிகளை உள்ளிருந்து பலவீனப்படுத்துகின்றன.

ஒரு சமூகத்தை உண்மையாக மாற்ற வேண்டுமென்றால், சட்டங்கள் மட்டும் போதாது, ஆட்சிகள் மாறினாலும் போதாது. சுய ஒழுக்கம் கொண்ட மனிதர்கள் உருவாக வேண்டும். அதிகாரத்தை விரும்பாமல், பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள், புகழைத் தேடாமல், நேர்மையைத் தேர்வு செய்யும் மனிதர்கள் தான் சமூக மாற்றத்தின் உண்மையான தூண்கள்.

சுய ஒழுக்கமே ஞானம்.
இது ஒரு வாசகம் அல்ல, ஒரு வாழ்க்கைத் தத்துவம்.

தன்னைச் சீரமைக்கத் தெரிந்தவனே சமூகத்தைச் சீரமைக்க உரிமையுள்ளவன்.

தன்னைத்தானே வழிநடத்தக் கற்றவனே, பிறருக்கு வழிகாட்டத் தகுதியானவன்.

இவண்:-
ஞானம் மு.அறிவுடைநம்பி 
வழக்கறிஞர்
கடலூர்-1

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...