கேள்வியை ஒழிக்கும்_அரசியல் சனாதன–பாசிச கூட்டுத் திட்டம்

மாற்றுக் கருத்து இல்லாமல் பார்த்துக் கொள்கின்ற அரசியல் ஜனநாயகம் அல்ல. அது அதிகாரத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட பாசிச அரசியல். ஜனநாயகம் என்பது ஒற்றைக் குரல் அல்ல அது மோதும் குரல்கள், மாறுபடும் கருத்துகள், இடையறாத கேள்விகள் கொண்ட உயிருள்ள அமைப்பு. அந்த உயிரை பறிக்கும் முயற்சியே இன்று அரசியல் என்கிற பெயரில் நடைபெறுகிறது.

எது சரி, எது தவறு என்று விவாதிப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. அந்த விவாதம் தடுக்கப்படும் தருணத்தில், மக்கள் குடிமக்களாக இருந்து அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள். “கேள்வி கேட்காதே” என்று சொல்லும் அரசியல், உண்மையில் “எங்களை எதிர்க்காதே” என்று மிரட்டுகிறது.

“எது குறித்தும் பேசக்கூடாது, எது குறித்தும் விவாதிக்கக்கூடாது, அனைத்தும் புனிதம், அனைத்தும் மாற்றமற்றது” என்று போதிக்கும் சிந்தனையே சனாதனம். சனாதனம் என்பது மதம் அல்ல; அது சமூகத்தை உறைய வைக்கும் அரசியல் தத்துவம். அது சமத்துவத்தை மறுக்கும்; மாற்றத்தை தடுக்கிறது; அதிகாரத்தை நிரந்தரமாக்க முயல்கிறது.

இந்த சனாதனச் சிந்தனையை அரசியல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து, அதனை விமர்சிப்பதே குற்றமாக்கப்படும் தருணத்தில்தான் பாசிசம் முழுமை அடைகிறது. அதிகாரம் புனிதமாக்கப்படுகிறது; அதிகாரத்தை கேள்வி கேட்பவர்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

மாற்றுக் கருத்து சொல்பவன் சமூக விரோதியாகவும், விமர்சிப்பவன் தேச விரோதியாகவும், கேள்வி எழுப்புபவன் குழப்பவாதியாகவும் முத்திரை குத்தப்படுவது திட்டமிட்ட அரசியல் யுக்தி. இது கருத்து மோதல் அல்ல; இது கருத்து ஒழிப்பு. கருத்து ஒழிப்பு என்பது சிந்தனையை அழிக்கும் அரசியல் வன்முறை.

இன்றைய தமிழக அரசியல் சூழலில், இந்த சனாதன–பாசிச மனநிலை திடீரென உருவானதல்ல. அது மெதுவாக, ஆனால் திட்டமிட்ட வகையில், அரசியல்–நிர்வாக–ஊடக அமைப்புகளின் வழியாக இறுக்கமாக கட்டமைக்கப்படுகிறது. அதிகாரத்தை கேள்வி கேட்கும் குரல்கள் ஓரங்கட்டப்படுகின்றன, விமர்சனங்கள் அவமதிக்கப்படுகின்றன,விவாதம் தேவையற்றதாக மாற்றப்படுகிறது.

கேள்வி கேட்பது குழப்பம் அல்ல. அது அரசியல் விழிப்புணர்வு. விவாதம் ஒழுங்கீனமல்ல. அது ஜனநாயக ஒழுக்கம். கேள்விகளை அடக்குவது அமைதி அல்ல  அது பயத்தின் அரசியல். விவாதத்தை ஒழிப்பது ஒழுங்கல்ல    அது அதிகார வெறியின் வெளிப்பாடு.

ஜனநாயகம் என்பது தேர்தல் நாளில் வாக்கு போடுவது மட்டும் அல்ல. அது தினமும் அதிகாரத்தை கேள்வி கேட்பது. அந்த உரிமை பறிக்கப்படும் நாளில், ஜனநாயகம் பெயரளவில்தான் உயிருடன் இருக்கும்.

கேள்வி கேட்பவன் எதிரி அல்ல.
கேள்வியை அடக்கும் அரசியலே ஜனநாயகத்தின் எதிரி.

இவண்:-

ஞானம் மு.அறிவுடைநம்பி 
வழக்கறிஞர் 
கடலூர்-1

கடந்த ஆண்டு இதே நாளில் நான் எழுதியது மீள் பதிவு உங்களுக்காக

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்