மதச்சார்பின்மை முழக்கம்
சாதி ஒழிப்பில் தொடரும் அரசியல் மௌனம்
இந்திய அரசியலில் சில வார்த்தைகள் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
“மதச்சார்பின்மை”, “சமூகநீதி”, “ஒற்றுமை”, “சமத்துவம்” போன்ற சொற்கள் மேடையிலிருந்து மேடைக்கு பயணிக்கின்றன. ஆனால் இந்த வார்த்தைகள் நடைமுறை அரசியலாக மாறும் தருணத்தில், ஒரு ஆழமான முரண்பாடு வெளிப்படுகிறது. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் பல கட்சிகள், சாதி ஒழிப்பு குறித்து பேசுவதில்லை; சமூகநீதி என்று முழங்கும் கட்சிகள், SC/ST மக்களின் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைகின்றன.
SC / ST இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தார்மீகமும் சட்டபூர்வமும் ஆன உரிமை. அது எவரின் கருணையாலும் கிடைத்த சலுகை அல்ல. இருந்தும், இவ்விடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் விதம், சமூகநீதி அரசியலின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் விடப்படுவது, விதிமுறைகள் தளர்த்தப்படுவது, கண்காணிப்பு அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்படுவது, இவையும் சமூகநீதி பேசும் அரசியல் தலைமைகளின் காலத்தில்தான் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இதற்கும் மேலான கவலை, SC / ST மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகள். கல்வி, வீடமைப்பு, வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்படும் இந்த நிதிகள், அந்த மக்களுக்கே முழுமையாகச் சென்றடைவதில்லை. பல மாநிலங்களில் இந்த நிதிகள் வேறு துறைகளுக்கு மாற்றப்படுகின்றன; பயன்படுத்தப்படாமல் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பப்படுகின்றன. இந்த நிர்வாக அலட்சியத்திற்கும் அரசியல் மௌனத்திற்கும் பொறுப்பேற்க வேண்டியவர்கள், மேடைகளில் சமூகநீதி குறித்து உரக்கப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதி குறித்து பேசும் இந்த அரசியல் சக்திகள், சாதி தீண்டாமைக்கு எதிராக எங்கே போராடினார்கள்?
எந்த களப்போராட்டம்?
எந்த சட்டமசோதா?
எந்த அரசியல் முன்மொழிவு?
சாதி ஒழிப்பு குறித்து பேசினால் “சமூக ஒற்றுமை பாதிக்கப்படும்” என்று சொல்லப்படும் வாதம், உண்மையில் சாதியை பாதுகாக்கும் அரசியல் நியாயமாக மாறியுள்ளது. சாதியை பேச விடாத அரசியல், சாதியை ஒழிக்காது; மாறாக, அதனை மறைத்து உயிரோடு வைத்திருக்கும். இந்த மௌனமே, இன்றைய இந்தியாவில் சாதி தொடர்ந்து செயல்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
இந்த அரசியலின் இன்னொரு முகம், SC / ST மற்றும் பழங்குடி மக்களை வாக்கு அரசியலுக்கான கருவிகளாகப் பயன்படுத்துவது. தேர்தல் காலங்களில் இந்த மக்களே முன்னணியில் நிறுத்தப்படுவார்கள்
கொடி பிடிக்க, கோஷம் போட, பரப்புரை செய்ய, வாக்கு சேகரிக்க. ஆனால் அதிகாரப் பகிர்வு என்ற இடத்தில் வந்தவுடன், அதே கட்சிகள் இவர்களை பின்னணிக்கு தள்ளிவிடுகின்றன. குறைந்தபட்சம் கட்சியின் உள் நிர்வாகப் பொறுப்புகளிலும் கூட இவர்களுக்கு இடம் வழங்கப்படுவதில்லை.
இதனால் எழும் அடிப்படை கேள்வி
#சமூகநீதி_என்பது_முழக்கமா, #அல்லது_அதிகாரப்_பகிர்வா?
வாக்குச் சாவடியில் மட்டுமே நினைவில் வரும் சமூகமா,
அல்லது முடிவெடுக்கும் மேசையிலும் இடம் பெறும் சமூகமா?
இன்று இந்தியா முழுவதும் “மதச்சார்பற்ற அரசியல, மதச்சார்பற்ற கூட்டணி” உருவாக்குவது குறித்தெல்லாம் பேசப்படுகிறது. ஆனால், சாதி–மத சார்பற்ற தேர்தல் கூட்டணியை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் உருவாக்க எந்த அரசியல் சக்தி தயாராக உள்ளது? சாதியை மறைக்காமல், அதனை நேரடியாக எதிர்கொள்ளும் அரசியல் இல்லாமல், சமூகநீதி வெறும் உரையாகவே மாறும்.
மதச்சார்பின்மை என்பது மத அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான அரசியல் கொள்கை. அது சாதி ஒழிப்புக்கான மாற்றாக அல்ல, சாதி ஒழிப்புடன் இணைந்தே அது அர்த்தம் பெற வேண்டும். மதச்சார்பின்மையை சாதி மறைப்புக்கான போர்வையாகப் பயன்படுத்துவது, சமூகநீதியின் அடிப்படை நோக்கத்தையே அழிக்கிறது.
எனவே, இன்றைய காலத்தின் அரசியல் தேவை தெளிவானது.
முழக்க அரசியல் அல்ல—
#அதிகாரப்_பகிர்வு_அரசியல்.
ஜாதி மறைப்பல்ல—#சாதி_ஒழிப்பு.
வாக்கு அரசியலல்ல #விடுதலை_அரசியல்.
இந்த சமரசமற்ற, தெளிவான சாதி ஒழிப்பு அரசியலை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு, இனி ஒடுக்கப்பட்ட மக்களிடமே உள்ளது. சமூகநீதி பேசுவது மட்டும் போதாது; அதை நடைமுறைப்படுத்தத் தயார் இருக்கும் அரசியல் தான், உண்மையான சமூகநீதி அரசியல்.
வழக்கறிஞர் ஞானம மு.அறிவுடைநம்பி
கடலூர்-1
(மீள் பதிவு )
Comments
Post a Comment