உண்மையை நோக்கி மக்களை அழைத்துச் செல்வதே அரசியல் கடமை...
அறியாமை என்பது தன்னிச்சையாக உருவாகும் ஒன்றல்ல. அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வரும் ஒரு இருள்.
மக்கள் சிந்திக்காமல் இருக்க, கேள்வி கேட்காமல் இருக்க, உண்மையை உணராமல் இருக்க—இந்த இருள் அவசியமாகிறது.
அதிகாரமும் ஆதிக்கமும் நிலைத்திருக்க வேண்டுமென்றால், மக்களின் அறிவு மங்கியிருக்க வேண்டும் என்பதே அதன் அடிப்படை அரசியல்.
அந்த இருளில் கிடப்பவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது எளிதான பணியல்ல. அது வசதியான அரசியலும் அல்ல. எதிர்ப்புகளும், அவதூறுகளும், தனிமைப்படுத்தல்களும் அந்தப் பாதையில் தவிர்க்க முடியாதவை. ஆனாலும், எத்தகைய இடர்கள் வந்தாலும் அந்தப் பணியைச் செய்வதே எமது கடமை.
இது தனிநபரின் விருப்பம் அல்ல சமூகத்தின் மீதான பொறுப்பு.
எழுச்சித்தமிழர் வழியே எமது வழி என்பதே அந்த உறுதியின் வெளிப்பாடு.
உண்மை என்பது எப்போதும் உண்மைதான். அதை யாராலும் அழிக்க முடியாது. அதிகாரம் உண்மையைப் பார்த்து பயப்படும் ஏனெனில் உண்மை கேள்விகளை எழுப்பும், கணக்குக் கேட்கும், மாற்றத்தைத் தூண்டும். அதனால் தான் உண்மையைத் தற்காலிகமாக பொய்களின் போர்வையில் மூட முயற்சிக்கிறார்கள்.
ஊடகங்களின் திரிப்பு, சமூக வலைதளங்களின் அவதூறு, பயமுறுத்தல் எல்லாம் அதற்கான கருவிகள்.
ஆனால், உண்மை நிரந்தரமாக மறைக்கப்படுவதில்லை. ஒருசில காலம் அது மௌனமாகலாம் ஆனால் அது தோற்காது. காலம் உண்மையின் பக்கம் நிற்கும்.
இன்று மறைக்கப்படும் உண்மை நாளை வெளிப்படும். அது வெளிப்படும் போது, பொய்களின் கோட்டைகள் தானாகவே இடிந்து விழும். உண்மை என்பது காலத்தின் சோதனையைத் தாண்டி நிற்கும் அரசியல் சக்தி.
நட்பு, தோழமை என்பவை எப்போதும் துதிப்பில் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒப்புதல் கொடுப்பதே நட்பு என்றால், அது உறவு அல்ல, அது வசதியான சமரசம். உண்மையான தோழமை என்பது தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியத்தில் இருக்கிறது. நாம் மதிக்கும் தோழமைகளே சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுக்கலாம். அந்தத் தவறுகளைப் பார்த்தும் மௌனமாக இருப்பது நட்பல்ல; அது துரோகம். அன்போடும் பொறுப்போடும் தவறைச் சுட்டிக்காட்டுவதே உண்மையான நண்பனின் கடமை.
அதேபோல், தலைமை என்பது பதவியில் இல்லை; பொறுப்பில் உள்ளது. அதிகார மேடையில் நிற்பது தலைமை அல்ல. மக்களின் வலியைப் பேசும் துணிவு, அவர்களுக்காக எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் தாங்கும் தைரியம் அதுவே தலைமை.
நண்பனின் நலனில் அக்கறை கொண்டவனே உண்மையான நண்பன்; மக்களின் நலனில் அக்கறை கொண்டவனே உண்மையான தலைவன்,மக்கள் நலனை எடுத்துச் சொல்வதில் துளி கூட தயக்கம் இருக்கக் கூடாது. அவர்களுக்கான பணிகளை முன்னெடுப்பதில் பின்னடைவு இருக்கக் கூடாது. சில நேரங்களில் அந்த முயற்சிகள் அந்தக் கணத்தில் தவறாகத் தோன்றலாம். சிலர் புரியாமல் எதிர்க்கலாம்; சிலர் திட்டமிட்டு திரித்து பேசலாம். ஆனால் காலம் கடந்தபின் அவர்கள் உணர்வார்கள் அதுதான் உண்மை என்று. அது தான் மக்களை விடுதலைக்குக் கொண்டு செல்லும் பாதை என்று.
என் அரசியல் முகமூடிகளால் கட்டப்பட்டதல்ல. யாரோடு பழகினாலும் உண்மையாக நிற்பதே என் இயல்பு. பொய் சொல்லவும், ஏமாற்றவும், கணக்குப் போடவும் எனக்குத் தெரியாது. உண்மையே என் ஆயுதம்,உண்மையே என் அரசியல், உண்மையே என் அடையாளம். இந்த நேர்மைதான் சிலருக்கு அசௌகரியமாக இருக்கலாம். ஆனால் அதுவே மாற்றத்தின் தொடக்கம்.
உண்மையைப் பேசுவது எளிதான பாதை அல்ல. அந்தப் பாதையில் தனிமையும் எதிர்ப்பும் வரும். இருந்தாலும், இருளுக்கு எதிரான வெளிச்சத்தின் அரசியல் தோற்காது. மக்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் இந்தப் பயணம் வரலாற்றை உருவாக்கும். அந்த வரலாற்றின் பக்கத்தில் நிற்பதே நமது தேர்வு.
எழுச்சித்தமிழர் வழியே எமது வழி.
இவண்:
வழக்கறிஞர் மு.அறிவுடைய நம்பி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
(2023 ஆம் ஆண்டு FB பதிவு)
Comments
Post a Comment