நீதிக்கட்சியின் இடஒதுக்கீடு
ஆதிதிராவிடர்களுக்கு 8% – பிராமணர்களுக்கு 16%
சமூக நீதியின் பெயரில் நடந்த திட்டமிட்ட அரசியல் மோசடி
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் “சமூக நீதி”, “இடஒதுக்கீடு” என்ற சொல்லாடல்களுடன் நீதிக்கட்சி ஒரு முன்னோடி இயக்கமாகப் போற்றப்படுகிறது. ஆனால் அந்த வரலாற்றை உண்மைகளுடன் கூர்ந்து ஆராய்ந்தால், நீதிக்கட்சியின் ஆட்சி காலம் பட்டியல் இன மக்களுக்கு விடுதலையை அல்ல, திட்டமிட்ட புறக்கணிப்பையும் துரோகத்தையும் தான் வழங்கியது என்பது தெளிவாகிறது.
மாண்டெகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு நடைபெற்ற 1920 மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதி கட்சி Justice Party ஆட்சியைப் பிடித்தது. 1920 டிசம்பர் 17 அன்று (A. Subbarayalu Reddiyar ) சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த அந்த அரசு, பின்னர் Panagal Raja தலைமையில் தொடர்ந்தது.
இந்த காலகட்டத்தில் நீதிக்கட்சி முன்வைத்த பிரதான அரசியல் முழக்கம் “பார்ப்பனரல்லாதாருக்கான பிரதிநிதித்துவம்” என்பதாகும்.
ஆனால், இந்த முழக்கம் பட்டியல் இன மக்களுக்கான சமூக நீதியை மையமாகக் கொண்டதல்ல, மாறாக, அதிகாரத்தை மறுவினியோகம் செய்வதற்கான உயர்சாதி–இடைச்சாதி அரசியல் ஏற்பாடாகவே இருந்தது.
மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதங்களில், “பார்ப்பனரல்லாதார்” என்ற சொல்லுக்கு நீதிக்கட்சி அளித்த விளக்கம் மிக முக்கியமானது. அந்த விளக்கத்தின் படி, பார்ப்பனரல்லாதார் என்றால் முஸ்லிம்கள், இந்திய கிறிஸ்தவர்கள், பார்ப்பனரல்லாத இந்துக்கள், ஜைனர்கள், பார்சிகள், ஆங்கிலோ-இந்தியர்கள் ஆகியோர்.
இந்த வரையறையில் பட்டியல் இன மக்கள் ஒரு தனி சமூகமாகக் கூட கருதப்படவில்லை. அவர்கள் அரசியல் வசதிக்காக கடைசி வரிசையில் சேர்க்கப்பட்ட ஒரு பிரிவாகவே பார்க்கப்பட்டனர்.
இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை (Communal G.O.) அரசு வேலைவாய்ப்புகளில் வெளிப்படையான பாகுபாட்டை நிறுவியது. வேலை வாய்ப்புகள் நிரப்பப்பட்ட வரிசையில், பட்டியல் இன மக்கள் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டனர். இது தற்செயலான தவறு அல்ல, திட்டமிட்ட அரசியல் முடிவு.
அரசு வேலைகளில் நிரப்பப்பட்ட வரிசை – சமூக நீதியா?
ஒரு அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு உருவானால்,
அவை நிரப்பப்பட்ட வரிசை இதுதான்:
1.பார்ப்பனரல்லாத இந்து
2.முஸ்லிம்
3..பார்ப்பனரல்லாத இந்து
4..ஆங்கிலோ-இந்தியர் / இந்திய கிறிஸ்தவர்
5..பார்ப்பனர்
6.பார்ப்பனரல்லாத இந்து
7.ஒடுக்கப்பட்ட வகுப்பு (பட்டியல் இனம்)
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான உண்மை:
பட்டியல் இனத்தவருக்கு ஒரே ஒரு இடம்
அதுவும் ஏழாவது இடத்தில்
இந்த அரசாணையின் சதவீத கணக்கு இன்னும் அதிர்ச்சியளிக்கிறது:
பார்ப்பனரல்லாதவர்கள் – 44%
பிராமணர்கள் – 16%
முஸ்லிம்கள் – 16%
கிறிஸ்தவர்கள் / ஆங்கிலோ-இந்தியர்கள் – 16%
பட்டியல் இன மக்கள் – வெறும் 8%
அதாவது, தலைமுறைகளாக கல்வி, நிலம், அதிகாரம் மறுக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு 8% மட்டுமே, அதே நேரத்தில், சமூக ஆதிக்கத்தின் உச்சியில் இருந்த பிராமணர்களுக்கு இரட்டிப்பு அளவில் 16% இடஒதுக்கீடு. இதை சமூக நீதி என்று அழைப்பது வரலாற்றை இழிவுபடுத்துவதற்குச் சமம்.
1922 ஆம் ஆண்டு கல்வி நிலையங்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் விரிவுபடுத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், 1928 ஆம் ஆண்டு வெளியான மூன்றாவது கம்யூனல் G.O. வரை அது நடைமுறைக்கு கூட வரவில்லை. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தலித்துகள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் (C. N. Annadurai ) அண்ணாதுரை இந்த கம்யூனல் G.O.-வை “மானுட சுதந்திர சாசனம்” என வர்ணித்திருந்தாலும், அந்த சாசனத்தில் தலித்துகளுக்கு வழங்கப்பட்ட அநீதியை அவர் கேள்விக்குட்படுத்தவில்லை. இதுவே திராவிட அரசியலின் அடிப்படை முரண்பாடு.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்த கம்யூனல் G.O. உச்சநீதிமன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்டது என்பது, அது ஜனநாயக சமத்துவத்திற்கு எதிரானது என்பதற்கான சட்டபூர்வ சான்றாகும்.
எனவே, நீதிக்கட்சியின் இடஒதுக்கீடு தலித்துகளுக்கான விடுதலையின் தொடக்கம் அல்ல. அது சமூக நீதியின் முகமூடியை அணிந்த ஒரு அரசியல் துரோகமாகவே இருந்தது.
அந்த அரசியல் தொடர்ச்சியே இன்றும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகளாக, ஒதுக்கல்களாக, வஞ்சனைகளாக வெளிப்படுகிறது.
வரலாற்றை மறைத்து சமூக நீதி பேச முடியாது.
தலித்துகளுக்கு எதிரான இந்த வரலாற்றுத் துரோகம் வெளிச்சத்துக்கு வராமல், சமத்துவம் சாத்தியமில்லை.
இவண்:-
ஞானம் மு.அறிவுடைநம்பி
வழக்கறிஞர்
கடலூர்-1
மீள் பதிவு
1 years ago, on this days
Comments
Post a Comment