பண்பாட்டை மட்டும் குறிவைக்கும் அரசியல்…

பண்பாட்டை மட்டும்
 குறிவைக்கும் அரசியல்… 

பண்பாட்டு காரணிகளை மட்டும் குற்றம் சாட்டி, அவற்றை எதிர்த்து ஒழித்துவிட்டால் சமத்துவம் தானாக நிலைநிறுத்தப்படும் என்ற அரசியல் நம்பிக்கை, உண்மையில் அதிகாரத்தைத் தொட அஞ்சும் ஒரு வசதியான அரசியலே.
இது சமத்துவத்தின் அரசியலை அல்ல, சமத்துவத்தின் பெயரில் நடக்கும் ஒரு தப்பித்தல் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

சாதி, தீண்டாமை, ஒடுக்குமுறை ஆகியவை பண்பாட்டில் வெளிப்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவை உருவாகியதும், தொடர்வதும், பாதுகாக்கப்படுவதும் அரசியல் அதிகாரத்தின் மூலம் மற்றும் பொருளாதார வளங்களின் சமமற்ற பகிர்வின் மூலம் என்பதே மறுக்க முடியாத உண்மை. இந்த அடிப்படை உண்மையை மறைத்து, பண்பாட்டையே முழு குற்றவாளியாக நிறுத்தும் அரசியல், ஆதிக்க அமைப்புகளுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது.

பண்பாட்டை விமர்சிப்பது, பல நேரங்களில் அதிகாரத்தைத் தொடாத அரசியலாகவே முடிகிறது. அது நில உரிமையைப் பற்றி பேசுவதில்லை, வேலைவாய்ப்பில் உள்ள பாகுபாட்டை உடைப்பதில்லை, கல்வி, நிர்வாகம், நீதித்துறை ஆகிய இடங்களில் உள்ள கட்டமைப்பு அநீதிகளைச் சவால் செய்வதில்லை. இதனால் ஆதிக்கம் தன் அரசியல், பொருளாதார அதிகாரத்தை அப்படியே வைத்துக்கொண்டே, “மாற்றம்” பேசும் வாய்ப்பைப் பெறுகிறது.

சமத்துவமற்ற தன்மை ஒரு சிந்தனைப் பிரச்சினை மட்டும் அல்ல, அது அதிகாரப் பிரச்சினை. அதிகாரம் யாரிடம் இருக்கிறது, வளங்கள் யாரிடம் குவிக்கப்படுகின்றன, முடிவுகள் யாருக்காக எடுக்கப்படுகின்றன என்பதே சமத்துவத்தின் அளவுகோல். இதைத் தொடாமல், சடங்கு–பழக்கம்–மொழி என்ற எல்லைக்குள் அரசியலை சுருக்குவது, ஆதிக்கத்தின் அடித்தளத்தை பாதுகாக்கும் செயலாகவே மாறுகிறது.

உண்மையான சமத்துவ அரசியல் என்பது பண்பாட்டை விமர்சிப்பதோடு நிற்காது. அது #அரசியல்_அதிகாரப்_பகிர்வை #கேள்விக்குள்ளாக்கும், #பொருளாதார_வளங்களின்
#மீதான_ஆதிக்கத்தை_உடைக்கும், நிர்வாகத்திலும் சட்டத்திலும் #ஒடுக்கப்பட்டவர்களின் #பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். இவை இல்லாமல் சமத்துவம் ஒரு முழக்கமாகவே இருக்கும் ஒரு சமூக மாற்றமாக மாறாது.

எனவே பண்பாட்டை மட்டும் குறிவைக்கும் அரசியல், சமத்துவத்தின் பாதை அல்ல.
அதிகாரத்தின் அடித்தளத்தைத் தாக்கத் துணியும் அரசியலே உண்மையான சமத்துவ அரசியல்.
அதைத் தவிர்க்கும் எந்த வழியும் எவ்வளவு முற்போக்காகப் பேசினாலும், இறுதியில் வெற்றுச் செயலாகவே  முடியும்.

இவண்;
வழக்கறிஞர் ஞானம் மு.அறிவுடைநம்பி 
கடலூர்- 1

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்