எதிரிகளை அடையாளம் காண மறுக்கும் சமூகமே நிரந்தர அடிமை
இன்று தலித் சமூகம் எதிரிகளை அடையாளம் காண முடியாத அளவிற்கு திட்டமிட்டு குழப்பப்பட்டிருக்கிறது. எதிரிகளுடன் வாழ்கிறோம், அவர்களோடு வேலை செய்கிறோம், அவர்களிடமிருந்து உதவிகள் பெறுகிறோம், அதனால் அவர்களையே நண்பர்களாக நம்புகிறோம். ஆனால் அவர்கள் நடத்தும் அரசியல், சமூக, கலாச்சார செயல்பாடுகள் முழுவதும் தலித் விடுதலைக்கு எதிரானவை என்பதைக் கவனிக்க மறுக்கிறோம்.
எதிரிகள் தங்கள் நலனுக்காக உருவாக்கிய ஒழுக்கம், நேர்மை, பணிவு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இவை அனைத்தையும் “அறம்” என்று நம்பச் செய்து, அந்த அறத்தின் பெயரிலேயே தலித்துகளை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். இந்த அடிமைத்தனம் வன்முறையால் இல்லை; நன்றி, விசுவாசம், மரியாதை, நல்லொழுக்கம் போன்ற சொற்களின் மூலமாக மனதுக்குள் ஊட்டப்பட்ட அடிமைத்தனம்.
ஒருவர் தேநீர் வாங்கிக் கொடுத்தால்,
ஒருவர் ஒரு நாள் உதவி செய்தால்,
ஒருவர் தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தால்,
அந்த நொடியில் அவரின் அரசியல், அவரின் சாதி நலன், அவரின் சுரண்டல் வரலாறு அனைத்தும் மறக்கப்படுகிறது. “அவர் நல்லவர்” என்ற ஒரே வரியில் எல்லா குற்றங்களும் கழுவி விடப்படுகின்றன. அவருடைய தவறுகளை எதிர்த்து கேள்வி கேட்பது நன்றியற்ற செயல் என்று நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது நன்றியுணர்வு அல்ல, இது அடிமை மனநிலை.
எதிரி பொங்கல் காசு கொடுத்தான் என்பதற்காக,
எதிரி மொய் வைத்தான் என்பதற்காக,
எதிரி தேர்தலில் உதவினான் என்பதற்காக,
சமூகத்தை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த எதிரியையே நண்பனாகவும், பாதுகாவலனாகவும், நலனாளனாகவும் ஏற்றுக் கொள்வதே சரி என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். இப்படி நண்பனாக்கப்பட்ட எதிரி தான், நாளை நமது உரிமை கேள்விகளை மிதிப்பான்; நமது அரசியல் குரலை அடக்குவான், நமது தலைமுறைகளை அடிமைகளாகவே வைத்திருப்பான்.
இந்த மனநிலையின் விளைவு தான் இன்று தலித் சமூகம் சமூகத்தின் அனைத்து தளங்களிலும் உரிமை அற்றதாக இருப்பது. அரசியல் அதிகாரம் இல்லை. முடிவெடுக்கும் இடங்களில் இடமில்லை. வளங்கள் இல்லை. பாதுகாப்பு இல்லை. மரியாதை இல்லை. இருப்பினும் “நன்றி” என்ற சொல்லால் அந்த அடிமைத்தனத்தை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
எதிரியை நண்பனாக ஏற்றுக் கொண்ட சமூகம், ஒருபோதும் சுயமரியாதையை அடைய முடியாது. நன்றியுணர்வுக்கும் அரசியல் விழிப்புணர்வுக்கும் இடையிலான வேறுபாட்டை உணராத வரை, எந்த சமூகமும் விடுதலைப் பாதையில் நடக்க முடியாது.
நன்றி சொல்ல வேண்டும் தனிநபரின் மனிதாபிமானத்திற்கு.
ஆனால் விசுவாசம் இருக்க வேண்டும் கொள்கைக்கும், சமூக விடுதலைக்கும்.
இந்த இரண்டையும் குழப்பிக் கொண்டால், நன்றி அடிமைத்தனமாக மாறும்.
இன்று தலித் சமூகம் எதிரியை அடையாளம் காண வேண்டிய தருணத்தில் உள்ளது. யார் நம்மோடு சிரிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, யார் நமது உரிமையை மறுக்கிறார்கள் என்பதே அரசியல் அளவுகோல்.
எதிரியை அடையாளம் காணாத சமூகம்
தன்னைத் தான் எதிரியாக்கிக் கொள்கிறது.
இதனை உணர்ந்து, சிந்தித்து, செயல்பட வேண்டிய காலம் இது.
இவண்:
ஞானம் மு.அறிவுடைநம்பி
வழக்கறிஞர்
கடலூர்-1
இதே நாளில் கடந்த ஆண்டு எழுதிய பதிவு
Comments
Post a Comment