உறையூர் – சோழர்களின் தலைநகரமும் “சேரி” என்ற சொல்லின் வரலாறும்
உறையூர் – சோழர்களின் தலைநகரமும் “சேரி” என்ற சொல்லின் வரலாறும்
சோழ நாட்டின் தொன்மையான தலைநகரம் உறையூர். இது “உறந்தை” என்றும் இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் தென்கரையில், உள்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்த உறையூர், சங்ககாலச் சோழர்களின் முக்கிய அரசியல் மற்றும் நகர மையமாக விளங்கியது.
உறையூர் சாதாரண குடியிருப்பாக இல்லாமல், பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட கோட்டை நகரமாக இருந்ததாகப் பழந்தமிழ் இலக்கியச் செய்திகள் உணர்த்துகின்றன. நகரைச் சுற்றி கோட்டை மதிலும், மதிலுக்கு வெளியே ஆழமான அகழியும், அதனைச் சூழ்ந்து பாதுகாப்பிற்கான மீளைக்காடும் இருந்ததாக அறியப்படுகிறது. கோட்டைக்குள் சோழ மன்னனின் அரண்மனையும் அமைந்திருந்தது.
உறையூர் – உறந்தை – கோழி
உறையூருக்கு “கோழி” அல்லது “கோழியூர்” என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது. கோழி தொடர்பான தொன்மக் கதையொன்றும் உறையூரின் பெயருடன் இணைத்துக் கூறப்படுகிறது.
இவ்வாறு,
உறையூர் – உறந்தை – கோழி (கோழியூர்)
என்ற பல பெயர்களால் சோழர்களின் தொன்மையான தலைநகரம் அறியப்பட்டிருக்கிறது.
சோழர் தலைநகரிலேயே உள்ள தெருக்களை சேரி என்று அழைக்கப்பட்டுள்ளது குறிப்பாக “ஏணிச்சேரி”
இங்கு மிகவும் கவனிக்க வேண்டிய செய்தி “சேரி” என்ற சொல்.
சங்ககாலத்தில் உறையூரில் “ஏணிச்சேரி” என்ற பெயருடைய குடியிருப்புப் பகுதியில். புகழ்பெற்ற சங்கப் புலவரான உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அப்பகுதியுடன் தொடர்புடையவராக அறியப்படுகிறார்.
அவரது பெயரே இதற்கான முக்கியமான இலக்கியச் சான்றாக நிற்கிறது:
“உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்”
சோழ மன்னனின் தலைநகருக்குள்ளேயே மக்கள் வசிக்கும் பகுதி “சேரி” என்று அழைக்கப்பட்டிருக்கும்போது, “சேரி” என்ற சொல் தொடக்கத்திலிருந்தே சமூக இழிவைக் குறிக்கும் சொல் என்று கூறுவது பொருத்தமல்ல.
பழந்தமிழ்ச் சூழலில் சேரி என்பது மக்கள் சேர்ந்து வாழும் குடியிருப்பு என்ற பொருளிலே வழங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் சமூகப் பிரிவினைகளால் அந்தச் சொல்லுக்கு வேறு பொருள்களும் இழிவான சமூகப் பயன்பாடுகளும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்தப் பிற்காலப் பொருளை சங்ககாலத்தின் மீது திணிக்க முடியாது.
உறையூரின் புவியியல் முக்கியத்துவம்
உறையூர் காவிரியின் தென்கரையில் அமைந்திருந்தது. அதற்கு எதிர்ப்புறத்தில் காவிரி–கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையிலான பகுதியில் திருவரங்கம் அமைந்துள்ளது. உறையூருக்குக் கிழக்கே திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை பகுதியும் உள்ளது.
இத்தகைய புவியியல் அமைப்பு உறையூருக்கு அரசியல், பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் வணிக முக்கியத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும்.
தாலமியின் “Orthoura”
கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க-ரோமானிய புவியியலாளர் கிளாடியஸ் தாலமி (Ptolemy) தென்னிந்தியாவைப் பற்றிய தனது புவியியல் பதிவுகளில் பல நகரங்களையும் அரசியல் பகுதிகளையும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிடும் “Orthoura” (ஓர்தொவுரா/ஓர்துரா) என்ற நகரத்தை உறையூருடன் அடையாளப்படுத்துகிறார்
“தாலமி சோழர்கள் நாகர் இனத்தவர் என்ற கருத்துகளை முன்வைத்துள்ளனர்
உறையூர் – “உரகபுரம்” – நாகர் தொடர்பு
வடமொழி மரபுகளில் உறையூர் “உரகபுரம்” (Uragapura) என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் சிந்திக்கத்தக்கது.
வடமொழியில் “உரக” (Uraga) என்பது பாம்பு அல்லது நாகத்தைக் குறிக்கும் சொல்லாகும். இதன் காரணமாக உறையூர், நாகர் மரபு மற்றும் சோழர்களுக்கு இடையிலான தொடர்பு குறிக்கிறது.
ஆகவே, “சேரி” என்பது இழிவல்ல!
சோழர்களின் தலைநகரான உறையூரிலேயே தெருக்களுக்கு சேரி என்ற பெயரில் குடியிருப்புக்கள் இருந்துள்ளது.
அங்கிருந்து வந்த சங்கப் புலவர்,
“உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்”
என்றே தமிழ் இலக்கிய வரலாற்றில் அறியப்படுகிறார்.
எனவே சங்ககாலச் சூழலில் “சேரி” என்ற சொல்லை இயல்பாகவே இழிவான சாதிச் சொல்லாகப் புரிந்துகொள்ள முடியாது.
அது முதன்மையாக மக்கள் சேர்ந்து வாழும் குடியிருப்பு அல்லது மண்ணின் பூர்வ குடிகள் குடியிருப்புப் பகுதியைக் குறித்த பழந்தமிழ்ச் சொல் என்பதை இலக்கியப் பயன்பாடுகள் காட்டுகின்றன.
பிற்காலத்தில் சமூக அமைப்புகளும் சாதியப் பிரிவினைகளும் ஒரு சொல்லின் பயன்பாட்டையும் சமூகப் பொருளையும் மாற்றியிருக்கிறது. அந்தப் பிற்கால இழிவை துடைத்து கிராமம் என்ற சொல்லிற்கு பதிலாக சேரி என்றே அழைக்க சட்டமாக்குவோம், பழந்தமிழ்ச் சொல்லின் தொன்மையான பொருளையும் இழிவாக்குவது வரலாற்றுக்கு முரணானது. தமிழ் இனத்திற்கே அவமானமானது.
ஆகவே “சேரி” என்பது இயல்பிலேயே இழிவுச் சொல் அல்ல;
அது தமிழரின் தொன்மையான குடியிருப்பு வரலாற்றைச் சுமந்து நிற்கும் சொல்.
இவண்:-
வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி
Comments
Post a Comment