சாதிவாரி கணக்கெடுப்பில் ‘பறையர்’ என்றே பதிவு செய்திட வேண்டும்!

சாதிவாரி கணக்கெடுப்பில் ‘பறையர்’ என்றே பதிவு செய்திட வேண்டும்!
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதம் உருவாகி வருகிறது. ஒவ்வொரு சமூகத்தின் மக்கள் தொகை, சமூக-பொருளாதார நிலை, கல்வி நிலை, அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைத் துல்லியமாக அறிந்து, அதனடிப்படையில் அரசின் கொள்கைகளையும் நலத்திட்டங்களையும் உருவாக்குவதற்கான அடிப்படைத் தரவாக சாதிவாரி கணக்கெடுப்பு அமைய வேண்டும்.

இந்நிலையில், தமிழ்நாடு முன்னாள் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மக்கள் தாங்கள் விரும்பியபடி சாதிப் பெயர்களைச் சொல்லும் நிலையில் குழப்பம் ஏற்படலாம் என்றும், எனவே அரசே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களின் சாதிப் பட்டியலில்  வரையறுத்துள்ளதன்  அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருப்பது விவாதிக்க வேண்டிய கருத்தாகும்.

சாதிவாரி கணக்கெடுப்பு என்று அரசு அறிவித்த பிறகு, ஒவ்வொரு சாதியும் அதன் சொந்த அடையாளப் பெயருடன் பதிவு செய்யப்படுவதுதான் உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பாக இருக்க முடியும்.

ஒரு பெரிய பிரிவுக்குள் பல்வேறு சமூகங்களை ஒன்றாக இணைத்து எண்ணிவிட்டால், ஒவ்வொரு சமூகத்தின் உண்மையான மக்கள் தொகையும், அவர்களின் சமூக-பொருளாதார நிலையும், கல்வி நிலையும், அரசியல் பிரதிநிதித்துவமும் துல்லியமாக தெரியாது.

சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கமே சமூகங்களின் உண்மையான நிலையை அறிந்து, அதற்கேற்ற சமூகநீதிக் கொள்கைகளை உருவாக்குவதுதான். எனவே, ஒவ்வொரு சமூகத்தின் தனித்துவமான அடையாளமும் கணக்கெடுப்பில் பாதுகாக்கப்பட வேண்டும்.

பன்மைத்துவமே இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குவதற்கு அதன் பன்மைத்துவத் தன்மை முக்கிய காரணமாகும்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைச் சிந்தனைகளில் ஒன்று. ஒவ்வொரு சமூகமும் தங்களது மொழி, பண்பாடு, மரபு, வரலாறு மற்றும் சமூக அடையாளங்களை அச்சமின்றி கடைப்பிடித்து வாழ்வதற்கான உரிமை ஜனநாயகத்தின் முக்கிய அடையாளமாகும்.

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே அடையாளம் என்ற பெயரில் பல்வேறு சமூகங்களின் தனித்துவத்தை அழிக்க முயல்வது பன்மைத்துவ ஜனநாயகத்திற்கு எதிரானதாகும்.

அதேபோல், ஒரு சமூகத்தின் பெயர் இழிவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்காக அந்த சமூகத்தின் வரலாற்றுப் பெயரையே அழித்துவிடுவது தீர்வாகாது.

ஒரு பெயரை வைத்து ஒருவரை இழிவுபடுத்துவதுதான் தவறு; அந்தப் பெயரையே அழிப்பது தீர்வு அல்ல.

‘பறையர்’ என்ற பெயர் இழிவு அல்ல

‘பறையர்’ என்ற பெயரைச் சொல்லக்கூடாது; அதற்கு பதிலாக வேறு பொதுப்பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்ற அணுகுமுறை குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒருவரை அவர் ‘பறையர்’ என்பதற்காக இழிவுபடுத்துவதும், ஒதுக்குவதும், வன்முறைக்கு உள்ளாக்குவதும் தவறு.

ஆனால் அதற்காக ‘பறையர்’ என்ற சமூகப் பெயரையே அழித்துவிடுவது சரியான அணுகுமுறை அல்ல.

தமிழர் என்ற பெயரை வைத்து ஒருவரை ஒடுக்குகிறார்கள்  என்பதற்காக ‘தமிழர்’ என்ற பெயரை அழிப்போமா?

இந்தியர் என்ற பெயரை வைத்து ஒருவரை ஒடுக்குகிறார்கள்  என்பதற்காக ‘இந்தியர்’ என்ற பெயரை அழிப்போமா?

அதேபோல, ஒரு சமூகத்தின் பெயரை வைத்து நடைபெறும் இழிவையும் ஒடுக்குமுறையையும் எதிர்க்க வேண்டும்; அந்த சமூகத்தின் வரலாற்று அடையாளத்தை அழிக்கக் கூடாது.

‘ஆதிதிராவிடர்’ என்பது வேறு; ‘பறையர்’ என்பது வேறு

‘ஆதிதிராவிடர்’ என்ற சொல் பல்வேறு அரசியல், நிர்வாக மற்றும் சமூகச் சூழல்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் ஒரு நிர்வாகப் பிரிவின் பெயரும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாரம்பரிய சமூகப் பெயரும் ஒன்றாகக் கருதப்படக்கூடாது.

எனவே, பறையர் சமூகத்தை ‘ஆதிதிராவிடர்’ என்ற பொதுப்பெயருக்குள் மட்டும் மறைத்துவிடாமல், சாதிவாரி கணக்கெடுப்பில் ‘பறையர்’ என்ற தனித்த அடையாளத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

மக்கள் விரும்பினால் பின்னர் அவர்களை ஆதிதமிழர் என்று அழைக்கலாம்; ஆதிதிராவிடர் என்று அழைக்கலாம்; வேறு அரசியல் அல்லது சமூகப் பெயர்களையும் பயன்படுத்தலாம்.

ஆனால் கணக்கெடுப்பில் அவர்களின் உண்மையான சமூக அடையாளம் மறைக்கப்படக் கூடாது.

முதலில் கணக்கெடுப்பு துல்லியமாக இருக்க வேண்டும்; அதன் பிறகு அரசியல் மற்றும் நிர்வாகப் பயன்பாட்டிற்கான பெயர்களை விவாதிக்கலாம்.

இடஒதுக்கீட்டுக்கும் துல்லியமான தரவு அவசியம்

சாதிவாரி கணக்கெடுப்பில் ஒவ்வொரு சமூகத்தின் எண்ணிக்கையும் தனித்தனியாகப் பதிவாகாவிட்டால், எதிர்காலத்தில் சமூகநீதிக் கொள்கைகளை உருவாக்குவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

குறிப்பாக இடஒதுக்கீடு, அரசியல் பிரதிநிதித்துவம், கல்வி வாய்ப்புகள், அரசு வேலைவாய்ப்புகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை மதிப்பீடு செய்யும்போது சமூகங்களின் துல்லியமான மக்கள் தொகை மற்றும் சமூக-பொருளாதார நிலை குறித்த தரவுகள் முக்கியமானவை.

எனவே, ஒரு பெரிய நிர்வாகப் பிரிவுக்குள் சிறிய சமூகங்களை மறைத்துவிடாமல், ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்த தரவு உருவாக்கப்பட வேண்டும்.

அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கவனிக்க வேண்டும்

பட்டியல் சாதிகளுக்கான தனித்தொகுதிகள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதித்துவ அமைப்புகளில், ஒவ்வொரு சமூகத்தின் மக்கள் தொகை, புவியியல் பரவல் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

எந்த ஒரு சமூகத்திற்கும் எதிர்காலத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்து விடக்கூடாது.

ஒரு சமூகத்தின் மக்கள் தொகை மிகப்பெரியதாக இருந்தாலும், அதன் அரசியல் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லாவிட்டால், அது சமூகநீதியின் நோக்கத்திற்கே முரணான நிலையை உருவாக்கும்.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு என்பது வெறும் எண்ணிக்கை கணக்கெடுப்பு அல்ல; அது எதிர்கால சமூகநீதி மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அடிப்படைத் தரவாக இருக்க வேண்டும்.

பெயரை மறைப்பது சமூகநீதியல்ல

கடந்த காலங்களில் பல்வேறு சமூகங்களின் பெயர்கள் அரசியல் மற்றும் நிர்வாகத் தேவைகளுக்காக மாற்றப்பட்டும், பொதுப்பெயர்களுக்குள் கொண்டு வரப்பட்டும் உள்ளன.

ஆனால் இன்று சமூகங்கள் தங்களுடைய வரலாறு, அடையாளம், உரிமை மற்றும் பிரதிநிதித்துவம் குறித்து விழிப்புணர்வு பெற்றுள்ள நிலையில், அவர்களின் விருப்பத்தையும் சமூக அடையாளத்தையும் கணக்கெடுப்பில் மதிப்பது அவசியமாகிறது.

ஒரு சமூகத்தின் பெயரை அழிப்பதன் மூலம் சாதி ஒழியாது.

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் சாதி அடிப்படையிலான ஆதிக்கத்தையும், பாகுபாட்டையும், தீண்டாமையையும், வன்முறையையும், சமூக ஒடுக்குமுறையையும் ஒழிக்க வேண்டும்.

பெயரை அழிப்பது சமூகநீதி அல்ல.

ஒடுக்குமுறையை அழிப்பதே சமூகநீதி.

‘பறையர்’ என்றே பதிவு செய்வோம்!
அரசும்  இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பில் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சமூகப் பெயரை ‘பறையர்’ என்றே பதிவு செய்ய வேண்டும்.

அந்தப் பெயரைப் பயன்படுத்துவதில் யாருக்கும் வெட்கம் இருக்க வேண்டியதில்லை.

‘பறையர்’ என்பது இழிவான சொல் அல்ல.

பறையர் என்பதற்காக ஒருவரை இழிவுபடுத்துவதுதான் இழிவு.
பறையர் என்பதற்காக ஒருவரை ஒதுக்குவதுதான் தவறு.
பறையர் என்பதற்காக ஒருவரைத் தாக்குவதுதான் குற்றம்.

ஆனால் அந்த சமூகத்தின் பெயரைச் சொல்லக்கூடாது என்று கூறுவது, அந்த சமூகத்தின் வரலாற்று அடையாளத்தை மறைப்பதாகவே அமையும்.

எனவே,

“எங்கள் சமூகத்தின் பெயரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; ஆனால் கணக்கெடுப்பில் எங்கள் சமூகத்தின் உண்மையான பெயரை மட்டும் மறைக்காதீர்கள்”

என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.

இது ஒரு சமூகத்தின் பிரச்சினை மட்டுமல்ல

இது பறையர் சமூகத்தின் பிரச்சினை மட்டுமல்ல.

ஒவ்வொரு சமூகத்திற்கும் தங்களது வரலாற்றுப் பெயருடன் கணக்கெடுக்கப்படுவதற்கான உரிமை இருக்க வேண்டும்.

ஒரு சமூகத்தை இன்னொரு பொதுப்பெயருக்குள் மறைத்துவிடாமல், இந்தியாவின் பன்மைத்துவத்தையும் சமூகங்களின் தனித்துவத்தையும் மதிப்பதே உண்மையான ஜனநாயகம்.

சாதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக சாதிகளின் இருப்பை மறைத்து விட முடியாது.

சாதி அடிப்படையிலான அநீதியை ஒழிக்க, முதலில் அதன் உண்மையான சமூக அமைப்பையும் அதன் விளைவுகளையும் துல்லியமாக அறிய வேண்டும்.

அதற்கான முதல் படிதான் துல்லியமான சாதிவாரி கணக்கெடுப்பு.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பில் பறையர் சமூகத்தின் பெயரை மறைக்கக் கூடாது.

பறையர் என்றே பதிவு செய்ய வேண்டும்!
எண்ணிக்கையில் மறைக்காதீர்!
அடையாளத்தில் மறைக்காதீர்!
வரலாற்றில் மறைக்காதீர்!
அரசியல் பிரதிநிதித்துவத்தில் மறைக்காதீர்!

பறையர் என்ற பெயர் இழிவு அல்ல;
பறையர் மீது இழிவு செய்வதே இழிவு!

— வழக்கறிஞர் மு. அறிவுடைநம்பி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்