'கல்வெட்டில் தீபாவளி' - ‘விளக்கீடு’ ஒளிவிழா
'கல்வெட்டில் தீபாவளி' - ‘விளக்கீடு’ ஒளிவிழா
----------------------------------------
இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி
----------------------------------------------------------
இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி பண்டிகை ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் பின்னாலுள்ள வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம்.
தீபஆவலி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள்.
ஒளி சிந்தும் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து ஒளிச் சுடரைப் போற்றிக் கொண்டாடும் பண்டைய மரபு சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அகநானூற்றில் வரும் அவ்வையாரின் பாடல், இலை தழைகள் ஏதுமின்றிச் சென்னிறப் பூக்களாய்ப் பூத்துக் குலுங்கும் இலவமரத்தின் காட்சி ஆரவாரம் மிக்க மகளிர் கூட்டம் மகிழ்ந்து கூடி ஏற்றிய அழகிய சுடர்களை உடைய நீண்ட விளக்கு வரிசை போலக் காட்சியளிப்பதாகக் கூறுகிறது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ, கார்த்திகை மீனுக்குரிய கார்த்திகைத் திங்களில் ஏற்றி வைக்கப்படும் நீளமான விளக்கு வரிசைகள் போலக் கோங்க மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். கார்த்திகை மாத முழுநிலவின் போது தீபஆவலி கொண்டாடப்பட்டதாக நக்கீரர் கூறுகிறார். இந்தத் தீபஆவலி அனைவரும் கூடியிருந்து கொண்டாடும் விழாவாக அமைந்தது.
சங்க காலம் தொட்டுச் சோழர்கள் காலம்வரை கார்த்திகையில் கொண்டாடப்பட்ட தீவஆவலி, வடபுலத் தாக்கத்தால் நாயக்க, மராத்திய மன்னர்களின் காலத்தில் இரண்டு விழாக்களாக மாறி ஒன்று, தொடர்ந்து கார்த்திகையிலும் மற்றொன்று ஐப்பசியிலுமாக அமைந்தன.
இன்று புத்தாடைகளோடும், புதுப்புது இனிப்புப் பண்டங்களோடும், வெடிகளோடும், வாண வேடிக்கைகளோடும் தொடர்புடையதாகவும், கோடிக்கணக்கான பணம் புரளுதற்குரிய வணிகத்தை ஊக்குவிப்பதாகவும் கொண்டாடப்படும் தீபாவளியைப்பற்றித் தமிழ்நாட்டில் காணக்கிடைக்கும் முதல் கல்வெட்டு, கி.பி. 1542 இல், அச்சுத தேவராயர் ஆட்சிக் காலத்தில் திருமலையில் பொறிக்கப்பட்டதே என அறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் தெரிவிக்கிறார். தீபாவளியன்று பெருமாளுக்கு அதிரசம் நிவேதனமாக அளிக்க ஆணையிடுவதாக இக்கல்வெட்டு அமைந்தது. கிபி 1542 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டு உள்ள திருமலை திருப்பதி பெருமாள் கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளில்
“திருப்பதி பெருமாளுக்கு தீபாவளி அன்று அதிரசப் படி இரண்டு”
என உள்ளது. இதன் மூலம், தீபாவளி பண்டிகை அன்று, திருப்பதி பெருமாளுக்கு அதிரசம் படைக்கப்பட்டதாக தெரிகிறது.
விசயநகர மன்னர் ஆட்சிக்கு முன்னர், தீபாவளி என்ற பெயரோடு எந்த விழாவும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படவில்லை. திருப்பதியில் கிடைக்கும் கல்வெட்டுச் செய்தியைக் கொண்டு, 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீபாவளி இங்குச் சிறப்பெய்திய நிலையை உணரமுடிகிறது.
விஜயநகர ஆட்சிக் காலத்தில், மதுரையில் குடியேறிய விஜய நகரத்திலிருந்து வந்த சௌராஷ்டிரர்களும் இதைப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய பகுதிகளை ஆண்ட நாயக்கர்களால் தமிழகத்தில் பதினாறாம் நூற்றாண்டு காலவாக்கில் புகுத்தப்பட்டு தீபாவளி, அந்நாட்கள் தொடங்கி தென்னிந்திய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவரங்கத்துக் கல்வெட்டொன்று கேரள மன்னனான இரவிவர்மன் ஒளித் திருநாளைக் கொண்டாடிய தகவலைத் தருகிறது.
மேலும், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சித்தாய்மூா் சிவாலயத்து இறைவன் பொன்வைத்தநாதருக்கு ஆண்டுதோறும் தீபாவளி நாளில் சிறப்பு அபிஷேகம் செய்ய அப்பகுதியில் உள்ள பல கிராம மக்களும், அரசு அலுவலா்களும் சோ்ந்து தாங்கள் பெறும் கூலியிலிருந்து கூலிப்பிச்சையாக ஒரு சிறு தொகையை இறைவனுக்கு அளித்து பல விழாக்களை நடத்தியுள்ளனா். அதில் ஒரு விழாதான் தீவாளி அபிஷேக விழா என கி.பி. 1753 டிசம்பா் ஏழாம் தேதி எழுதப்பட்ட சித்தாய்மூா் சிவாலய செப்பேடு குறிக்கிறது.
இதன்படி, சித்தாய்மூா் மாகாணத்திலிருந்த நத்தப்பள்ளம், பள்ளியமூலை, புதூா், பனங்காடி, சூரமங்கலம், உத்திரங்குடி, தரகுமருதூா், அகரமணக்கால், மடப்புரம், பள்ளிச்சந்தம், கோமளக்கோட்டை, குடிபாதி, நெடுஞ்சேரி, கூமூா், கீரக்களூா், ஆதிரங்கம், செம்பியமணக்குடி, கோயில்துறை, ஈசனூா், முள்ளிகுடி, நரிக்குடி, சிங்களாத்தி, கிராமபேறு, முத்தரசநல்லூா், சம்பிருதி, முசுமு என அனைத்து ஊராரும் சாதி வேறுபாடின்றி சித்தாய்மூா் பொன்வைத்தநாதா் என்ற இறைவனுக்கு தீபாவளி அபிஷேகம் உள்ளிட்ட விழாக்களை நடத்தியுள்ளனா். மேலும், அம்மக்கள் இறைவனுக்காக இலுப்பை, தென்னை முதலிய மரங்களை நட்டும் தொண்டு புரிந்துள்ளதை அச்செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது.
குடந்தை சக்கரபாணி ஆலயத்தில் உள்ள கல்வெட்டில், தீபாவளி நாளில் பெருமாளுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெற்ற விவரங்கள் காணப்படுகிறது. லஷ்மிநாராயணன் என்னும் சாரங்கபாணியின் தீவிர பக்தர், தனது இறுதிக்காலம் வரையில் பெருமாளுக்கு சேவை செய்தார். இந்த ஆலயத்தின் 65 அடி உயரம் கொண்ட பதினொரு நிலை ராஜ கோபுரத்தினை கட்டியவரும் இவரே. பெருமாளைத் தவிர வேறு உறவு இல்லாதவர், ஒரு தீபாவளி நன்னாளன்று பெருமாளின் திருவடியை அடைந்தார்.
பொதுவாக ஒருவருக்கு குழந்தைகள் இல்லாமல் போனால், அவர் இறந்த பின் அவருக்கு முறையான சடங்குகள் செய்ய இயலாமல் போய்விடும். அதனால் அந்த நபர் நரகம் செல்லும் நிலை ஏற்படும். பெருமாள் வந்து தன்னுடைய பக்தருக்கு, தானே மகனாக இருந்து, சடங்குகளைச் செய்தாராம். இது நடந்த மறுநாள் கோவிலை திறந்தபோது, பெருமாள் விக்கிரகத்தில் ஈர வேட்டியும், மாற்றிய பூணூலுமாக இறைவன் காட்சியளித்துள்ளார். அருகில் தர்ப்பைகள் கிடந்துள்ளன. இது நடந்தது ஒரு தீபாவளித் திருநாளில். இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று உச்சிக் காலத்தில், திதி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதேபோல், காளஹஸ்தி கோயிலிலுள்ள கல்வெட்டு தீபாவளித் திருநாளில் இறைவனுக்குச் சிறப்பு மானியங்கள் வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
தென்னிந்தியாவில் தீபாவளி முதல் குறிப்பு காணப்படுவது, சாளுக்ய திரிபுவன மன்னன் காலத்தில் எழுதப்பட்ட கன்னட கல்வெட்டில்தான். கி.பி. 1117ல் எழுதப்பட்ட இதில், ஆண்டுதோறும் சாஸ்திரங்களில் தேர்ச்சிபெற்ற சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு தீபாவளி நாளில் பரிசுகள் வழங்கப்பட்டதாக குறிப்பு உள்ளது.
மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சித் திணை என்பார்கள். அதற்கு உரிய தெய்வம் தமிழ்க் கடவுள் முருகன்தான். முருகன் நெருப்பின் கடவுள். நெருப்பு வடிவானவன். குறிஞ்சியின் பெரும்பொழுது ஐப்பசி, கார்த்திகை எனும் கடும் மழைக்காலங்கள். இந்த மலைப் பிரதேசங்களில் கார்த்திகை மாத முழு நிலவு நாளில் நெருப்பு வடிவான முருகனை வரிசையாக விளக்குகள் ஏற்றி வழிபடுவதுதான் கார்த்திகைத் திருவிழா.
இதை அகநானூறு,
‘கலிகொல் ஆயம் மலிபு தொகுபு அஞ்சுடர் நெடுங்கொடி’
என்கிறது.
இதில் அஞ்சுடர் நெடுங்கொடி என்றால் அழகிய சுடர்களின் கொடி போன்ற வரிசை என்று பொருள். இதுபோலவே
‘அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில் திருவிழா விளக்கம்’ என்றும்
‘மதி நிறைந்து அறுமீன் சேரும் இருள் அகல் நடுநாள்’ என்றும்
இந்நாளைக் குறிப்பிடும் சங்கப் பாடல்கள் உள்ளன.
அகநானூற்றில் 141 ஆம் செய்யுளில் கார்த்திகை விழாவைப்பற்றிய அரிய விளக்கம் அமைந்துள்ளது. தீபம் + ஆவளி தீபாவளியாயிற்று. விளக்கு வரிசை என்பது இதன் பொருள்.
கார்த்திகை என்ற பெயர் கூட இல்லாத அகநானூற்றுக் குறிப்பில், மகளிர் முழு நிலவு நாளில் அறுமீன்கள் சேரும் நள்ளிரவில் விளக்குகளைத் தெருவெல்லாம் ஏற்றி, மாலைகளைத் தொங்கவிட்டு விழா நடத்தியதாகக் காணப்படுகிறது. எனவே இது தீபாவளிதானே!
இதே நூலில் 17, 185 ஆகிய செய்யுட்களிலும் இவ்விழாவைப்பற்றிய செய்திகள் உள்ளன.
நற்றிணையின் 202 ஆம் பாடல், கார்த்திகையை அறம் செய் திங்கள் என்கிறது. இந்த விழாவோடு எந்தத் தெய்வமும் தொடர்புப்படுத்தப்படவில்லை; தின்பண்டங்களோ, புத்தாடைகளோ சுட்டப்படவில்லை; பட்டாசு வெடித்தல் பற்றிய குறிப்பும் இல்லை; முழுக்க முழுக்க வானியல் தொடர்பான ஒரு நிகழ்ச்சியாகவே இது குறிக்கப்பட்டது.
சங்க இலக்கியத்தில் சிறப்புப் பெறுவது கார்த்திகை மட்டுமே. இதன் பெயர் ‘விளக்கீடு’.
தீபாவளி என்று வடமொழிப் பெயரும், விளக்கீடு என்ற தமிழ்ப்பெயரும் பொருளால் ஒன்றுபடுவதனைக் காணலாம்.
ஐப்பசி மாதம் அமாவாசையை ஒட்டித் தீபாவளியும், கார்த்திகை மாதம் முழுநிலவை ஒட்டிக் கார்த்திகையும் கொண்டாடப்படுகின்றன.
இதனை ஒரு வேற்றுமை என்று கணக்கிடக்கூடும். ஆனால், வடபுலத்தில், தீபாவளி கொண்டாடும் மாதத்தைக் கார்த்திகம் என்றே குறிக்கின்றனர்.
அஃதாவது, அவர்கட்கு அது கார்த்திகை மாதம் ஆகும்.
எனவே ஒருவகையில் மாதத்தாலும் இரண்டு விழாக்களும் ஒன்றே எனக் கருத இடமேற்படுகிறது.
வராகமிகிரரின் கணக்குப்படி, தமிழ்மாதம் பிறப்பதற்குப் பதினைந்து அல்லது இருபது நாட்களுக்கு முன்பே சந்திரமான அடிப்படையிலான மாதம் பிறந்து விடுகிறதாம். இதனால் கார்த்திகம் என்ற பெயரும், கார்த்திகை என்ற பெயரும் ஒன்றுபடக் காண்போம்.
விசயநகர வேந்தர் காலத்தில் இத்தாலி நாட்டிலிருந்து விசயநகரம் வந்த நிக்கலோ டி கோண்டி என்பவரும் டோமிங்கோ பேயசு என்ற இன்னொரு ஆசிரியரும் தரும் தீபாவளி பற்றிய விளக்கத்தாலும் உறுதி செய்யலாம். இதற்கு உறுதுணையாக, பதினென்கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்றான கார்நாற்பதில் உள்ள ஒரு சான்றும் அமையக் காணலாம்.
நிக்கலோ டி கோண்டி என்பவர் தீபாவளிப் பண்டிகை நாளை வருடப்பிறப்பு நாள் என்று குறித்தார். டோமிங்கோவும் இதனை ஏற்றார். இவ்வறிஞர், இவ்விழா அக்டோபர் 12இல் நடந்ததாகக் குறிக்கிறார். நரகாசுரன் வரலாற்றோடு தொடர்புப்படுத்தியதையும் இவர் சுட்டுகிறார். ஆண்களும், பெண்களும், வயது வேறுபாடின்றி, ஆறு, குளம், கடல் ஆகியவற்றில் நீராடி, புத்தாடை புனைந்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஆடியும் பாடியும் களித்தனர் என்கின்றனர். தீபாவளி நாள் அமாவாசையாகும் என்பதனையும் சுட்டிக்காட்டும் பேயஸ் என்ற அறிஞர், அமாவாசையில் தொடங்கும் ஆண்டு, அமாவாசையிலேயே முடிந்தது என்கிறார்.
தமிழ்நாட்டில் தீபாவளி அமாவாசையை ஒட்டி ஐப்பசியில் கொண்டாடப்படுகிறது. ஆனால் வடநாட்டவர் கருத்துப்படி, கார்த்திகையில் கொண்டாடப்படுகிறது. வடநாட்டவரின் விளக்கீட்டு விழாவும் மூன்று நாள் கொண்டாடப்பட்டது என்பதனைக் கருதவேண்டும். தமிழ் நூல்களுள் கார்த்திகை என்ற பெயரை முதன்முதலாகப் பதினென்கீழ்க்கணக்கு நூல்களான கார்நாற்பதிலும் களவழி நாற்பதிலும் காண்கிறோம். இவற்றில், கார்நாற்பதில் வரும் குறிப்பு மிகச் சிறப்பானது.
தீபாவளியும் கார்த்திகையும் ஒன்றே என்று உறுதிசெய்யப் பெரிதும் உதவுவது.
இந்த நூலின் ஆசிரியர், காடுகளில், ‘தோன்றி மலர்கள்’ பேரளவில் பூத்துக் குலுங்குவதனை வருணிக்கையில், பின்வருமாறு கூறுகின்றார்.
‘நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி (26).
தலைநாளாவது முதல்நாள் அல்லது தொடக்க நாளாகும். கார்த்திகை விழாவின் முதல்நாளில் ஏற்றிவைக்கப்பட்ட விளக்கு என்பதனால், மேலும் சில நாட்கள் அது கொண்டாடப்பட்டது என்பது வெளிப்படையாகும். அது எத்துணை நாள் கொண்டாடப்பட்டது என்று அது வெளிப்படக்கூறாவிட்டாலும், இன்றுள்ள நடைமுறையைப் பார்க்கையில், மூன்றுநாட்கள் கொண்டாடப்பட்டது என்பது விளங்குகிறது. இன்று, மூன்றாம் நாள் கார்த்திகை, ‘குப்பைக் கார்த்திகை’ எனப்படுகிறது. உழவுக்குப் பயன்படும் குப்பை மேடுகளில் விளக்கு ஏற்றுவது வழக்கமாகும். முதல்நாளில் மிகுதியான விளக்குகளை ஏற்றினர். அதனால்தான், தோன்றிமலர் மிகுதிக்கு அது உவமையாயிற்று.
களவழிநாற்பது இதனை, ‘கழிவிளக்கு’ என்கிறது. 17. கழி என்னும் உரிச்சொல் மிகுதிப் பொருள் தருவதாகும். அடுத்தடுத்த நாளில் ஒரு சில விளக்குகள் மட்டும் ஏற்றப்பட்டன என்பது குறிப்பு. தீபாவளி ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால் விளக்கீடு இதில் இடம்பெறவில்லை. இது தமிழ் நாட்டில் உள்ள நிலை.
நிக்கலோ டீ கோண்டி தீபாவளியினை மூன்று நாள் விழாவாகக் கூறுவதனை, நம் கார்த்திகைக் கொண்டாட்டத்தோடு ஒப்பிடும்போது இரண்டு விழாவும் ஒன்றே என்ற முடிவுக்கு வருதலைத் தவிர்க்க முடியாது.
வட இந்தியாவில் தீபாவளி என்பது அவர்களின் கார்த்திகம் எனப்படும் மாதத்தின் அமாவாசை நாள்தான். வட இந்திய, தென் இந்தியப் பஞ்சாங்கங்களுக்கு இடையே இருபத்தைந்து நாட்கள் வித்தியாசம் வரும். இதனால்தான் அவர்கள் கார்த்திகம் என்று குறித்ததை நாம் ஐப்பசி என்று குறித்துள்ளோம். இந்தப் பஞ்சாங்கக் குளறுபடியால்தான் தீபாவளி என்பது ஐப்பசி மாத அமாவாசையில் கொண்டாடப்படுவது என்றும் கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதம் கொண்டாடப்படுவது என்றும் பிற்காலங்களில் தனித்தனியாகக் கொண்டாடும் வழக்கம் உருவானது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தஞ்சை மராட்டியர் ஆட்சிக்குப் பிறகு வட இந்தியாவின் பண்டிகைகள் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படும் வழக்கம் உருவானது. இப்படித்தான் வட நாட்டு தீபாவளி எனும் கார்த்திகம் தமிழ்நாட்டில் நுழைந்து கொண்டாடும் வழக்கம் உருவானது.
சங்க காலத்தில் தமிழ் நிலம் சமணம் தழைத்த நிலமாக இருந்தது. சமண ரிஷிகள் பொதுவாக ஒரே இடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் வசிக்க மாட்டார்கள். ஆனால், மழைக் காலத்தில் மட்டும் தங்கள் மடங்களில் வசித்துக்கொள்வது வழக்கம். இப்படி வசிப்பதை ‘சதுர் மாஸ்ய விரதம்’ என்பார்கள். அதாவது நான்கு மாத நோன்பு.
மழைக்கால முடிவின் அடையாளமாக கார்த்திகை மாதத்தின் கடைசி நாளில் தீபங்கள் ஏற்றி வழிபட்டு விரதத்தை முடித்துக்கொண்டு தீர்த்தயாத்திரை தொடங்குவார்கள். மடாலய அடியார்கள், மக்கள், சீடர்கள் இப்படி யாத்திரை கிளம்பும் துறவியர்க்கு பழங்கள் முதலியன கொடுத்து வழியனுப்புவர். இதனை, ‘அறுமீன் பயந்த அறம்செய் திங்கள் செல் சுடர் நெடுங்கொடி’ என்ற நற்றிணைப் பாடல் உறுதிப்படுத்துகிறது.
இதிலும் கார்த்திகை மாதக் கடைசி என்பது முழு நிலா நாளா அமாவாசையா என்ற சர்ச்சை உள்ளது. சில துறவியர் மட்டும் அமாவாசையை கார்த்திகையின் இறுதி நாளாகக் கணித்து அதைப் பின்பற்றினர். இவர்களே தீபத் திருவிழாவைக் கொண்டாடினர். இதனை ஆக்ரஹயானம் என்பார்கள். இதற்கான குறிப்புகள் பல்லவர்கள், கங்கர்களின் செப்பேடுகளிலேயே இருக்கின்றன. துறவியர்க்கு இப்படி தானம் கொடுத்து வழி அனுப்புவதை ‘கார்த்திகைப் பச்சை’ என சோழர் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இந்த நாளை பிற்பாடு சைவம் நன்கு விளைந்த சோழ நிலத்திலும் முக்கியமான நாளாக ஏற்றுக்கொண்டார்கள். கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலி கோயிலுக்கான திருமயிலைப் பதிகத்தில் இதனை ‘தொல் கார்த்திகை நாள் விளக்கீடு’ என்கிறார்.
இதுவே, நமது தீபாவளியின் பூர்வ வடிவம். முருகன் எனப்படும் குறிஞ்சி நிலத் தலைவனின் வழிபாடு கெளமாரமாகி சைவம் எனும் பெருமதத்துடன் கிபி ஏழாம் நூற்றாண்டு போல ஒன்று கலந்து விட்டது என்பதையே இச்செய்திகள் காட்டுகின்றன.
சோழ மன்னர்கள் கட்டிய கோயில்களில் தீபாவளி கொண்டாடப்பட்டதற்கான பழம்பெரும் ஓவியங்கள் பாங்குற வரையப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். பட்டாசுகள், வாண வேடிக்கைகளை அரச வீரர்கள் வெடிப்பதைப் போன்ற கவின்மிகு ஓவியங்கள் இவை. இதெல்லாம் பிற்பாடு மராட்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள் காலத்தில் பட்டாசு எனப்படும் கந்தகம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வந்தபிறகு உருவான வழக்கமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், பட்டாசுத் தொழில்நுட்பம் எப்போது இங்கு வந்தது என்பதற்கு தெளிவான தரவுகள் இல்லை.சீனாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பட்டாசு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தமிழகம் இரண்டாயிரம் ஆண்டுகளாக சீனத்தோடு தொடர்புடையது. பழங்காலத்தில் இந்தியாவின் எந்த நிலப் பகுதியைவிடவும் சீனத்தோடு அதிகத் தொடர்பு கொண்டிருந்தவர்கள் தமிழகம்தான். அதனால், பட்டாசு வெடிக்கும் வழக்கம், குறிப்பாக தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் வழக்கம், எப்போது, எங்கு உருவானது என்பதும் ஊகிக்கக் கூடியது.
தமிழ்மரபில், கார்த்திகை சைவத்தோடு (சிவனோடும் முருகனோடும்) தொடர்புடையது. வடபுலத்தில் கார்த்திகை விழா (தீபாவளி) வைணவத்தோடு தொடர்புடையது.
தமிழ்நாட்டுக் கார்த்திகையில் எண்ணெய் முழுக்கு, புத்தாடை, இனிப்பு முதலியன இல்லை. வடவர் மரபில் இவை தவிர்க்க முடியாதவை.
பெரும்பாலும் இது தமிழர்களின் முன்னோர்களிடமிருந்து, உருவான பண்டிகை என்பதாக இருக்க முடியும்.
நரகாசூரன் என்னும் அசுரனை சத்யபாமாவோடு கண்ணன்வதம் செய்தபொழுது, அவனுக்குக் கொடுத்த வரத்தின் படி, ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தியன்று விடியல் காலையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. நரகாசூரன் கதையை ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். தீபாவளியன்று பகவானுக்கு நிவேதித்த பிரசாதங்களைச் சாப்பிட வேண்டும் என்கின்ற குறிப்பு இதில் மறைபொருளாக இருக்கிறது.தீபாவளியன்று மட்டுமல்ல, தினசரி, நீங்கள் இறைவனுக்கு நிவேதித்து விட்டு அந்த உணவை, பிரசாதமாகச் சாப்பிட வேண்டும். அப்படி இருந்தால் தினந்தோறும் தீபாவளி தான் என்பது இப்பாசுரத்தால் தேறும் பொருள்.
சாவித்திரி, எமனோடு வாதிட்டு சத்தியவானை உயிருடன் மீட்ட நாளும் இதுதான்.
நசிகேதன், எமலோகம் சென்று வரம் பெற்று திரும்பிய நாளும் இதுதான்.
பகீரதன், தன் முன்னோர்கள் புனித மடையவேண்டி தேவலோக கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்த நாளும் தீபாவளித் திருநாள்தான்.
இவையெல்லாம் நடந்தது ஐப்பசி மாதத்தில்.
மகாராட்டிரத்தில் மகாபலி வாமன அவதாரத்தால் அடக்கப்பட்ட அல்லது முத்தியளிக்கப்பட்ட நாளாகக் கருதி மகாபலியின் உருவங்களை வழிபடுவதாகவும் அதுதான் தீபாவளி என்றும் அறிகிறோம். மஹாராஷ்ட்ராவில் இதை "பலிபாத்யாமா" என்று சொல்கிறார்கள். மகாபலி சக்ரவர்த்தி வாமனரால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு சென்று அங்கு அரசனாகிறார் என்பதை இது குறிக்கிறது. கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
இதேபோல், ஞான தீபாவளி என்றும் போற்றுவர்! பிரகலாதனின் பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள் தீபாவளி. அன்று ஏற்றப்படும் தீபம் “எம தீபம்” எனப்படும். வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலி சக்ரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு தன் ஞானத் திருவடி சூட்டிய நாள்தான் தீபாவளி என்பாரும் உளர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தாம்பூலம் போடும் திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி அன்று நாம் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல், மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகாலையில் எழுந்து, ‘உடன்’ எனப்படும் நறுமண எண்ணெயைத் தேய்த்து குளிக்கின்றனர்.
நேபாளத்தில், தீபாவளியை ‘தீஹார்’ திருவிழாவாக 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு நாளும் பிராணிகளுக்கு உணவு படைக்கின்றனர்!
விஷ்ணுவின் இடத்தில் காளியை வைத்து வழிபடுவதாகவும் கூறுகின்றார். இராமபிரான், இராவணனை அழித்து, சீதாப்பிராட்டியை மீட்டு, அயோத்திக்குத் திரும்பி வந்து முடிசூட்டிக் கொண்ட நாளே தீபாவளி நாள் என்ற கருத்தும் உண்டு.
சர்வமத பண்டிகை: தீபாவளியை இந்து மதத்தினர் மட்டுமல்ல, பவுத்த, ஜைன மதத்தினரும் கொண்டாடுகின்றனர்.
சமணர்களின் தீபாவளி:
சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி. வர்த்தமான மகாவீரர், தம்முடைய பாவாபுரி அரண்மனையில் இரவு முழுவதும் தம் மாணாக்கர்க்கு அறநெறிகளை எடுத்துரைத்தார் என்றும், பொழுது விடிவதற்குச் சற்று முன்பாக, வைகறையில் அவர் முத்திப்பேறு அடைந்தார் என்றும், உலகத்துக்கே ஞான ஒளியாக இருந்த மகாவீரர் மறைந்ததை நினைவுபடுத்த இந்த நாள்ல வீடுகளில் விளக்கேற்றி வழிபட வேண்டுமென்று என்று பாவாபுரி மன்னர் ஏற்பாடு செய்தார் அதுதான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்றும் அது முதலாக, அவரைப் பின்பற்றியோர் அந்நாளை ஞானத்தின் அடையாளமான விளக்குகளை ஏற்றிக் கொண்டாடினர் என்றும், இன்றும், குஜராத்தைச் சார்ந்த மார்வாரிகள் இந்நாளில் தம் புதுக்கணக்கைத் தொடங்குவர் என்றும், அதுவே ஆண்டின் பிறப்பாகக் கொள்ளப்படுகிறது என்றும் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, (சமணமும் தமிழும், பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி) நூலில் குறித்துள்ளார்கள். இக்கருத்து, முன்னர்ச்சுட்டிய நிகிலோ டீ கோண்டி, பேயசு ஆகியோரின் கருத்தைத் தழுவியதாகவே தோன்றுகிறது.
அதேபோல் ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சீவக சிந்தாமணியில் ,”கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர்” என்று வருகிறது. இது திகம்பர ஜைன தீபாவளி திருநாளை சுட்டியிருக்கவும் வாய்ப்புண்டு அல்லது பண்டைய தமிழ் வழக்கத்திலும் சுட்டியிருக்கலாம்.
தமிழன் மரபில் நீத்தார் வழிபாடு செய்யும் போது தான் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்போம். அதே மாதிரி தீபாவளி நாள் அமாவாசைக்கு தான் வரும். இந்த விஷயங்களை வைத்து பார்த்தால் மகாவீரர் உடைய நினைவு நாள் தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறார்களோன்னு தெரியுது.
ஜைன-பௌத்தர்கள் காலங்களில், இதிகாச-புராணங்களில் அதிக அளவு இடைசெருகல்கள் செய்யப்பட்டன. அதுமட்டுமல்லாது, சில விசயங்கள் மாற்றி எழுதப்பட்டன, ஏன் புதியதாக புராணங்களையே உருவாக்கி சேர்த்தனர். இதனால், 18-புராணங்கள், 18-உப-புராணங்கள், என்று எண்ணிக்கையிலும் வளர்ந்தன.
கயிலாய பர்வதத்தில் தீபாவளி நாளில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆட, அதை நினைவூட்டும் விதமாகவே குஜராத் மாநில மக்கள் தீபாவளி நாள் இரவில் சொக்கட்டான் ஆடும் பழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள். அத்தோட அம் மாநிலத்தில் புதுக் கணக்கு துவங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்னிக்கு சின்ன குழந்தை தொடங்கி இளைஞர்கள் முதியோர்கள் என அனைவரும் பட்டம் பறக்க விட்டு மகிழ்கிறார்கள்.
இராவணனை அழித்து விட்டு சீதாதேவியை மீட்ட இராமர் தமது பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலக்ஷ்மணனுடன் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இராமாயண இதிகாசத்தில் தீயவை அழிந்து நல்லவை பெற்றதன் நினைவாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பாண்டவர்களின் வருகை மகாபாரதத்தின் படி, வனவாசத்திற்குப் பிறகு பாண்டவர்கள் திரும்பியது தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. சூதாட்ட மண்டபத்தில் சூழ்ச்சியால் தோற்ற பிறகு வனவாசத்திற்கு அனுப்பப்பட்டனர். அதன்பின் நடந்த போரில் வெற்றிபெற்று பாண்டவர்கள் நகரம் திரும்பிய போது அந்நாட்டின் மக்கள் தங்கள் அன்புக்குரிய பாண்டவர்களை வீடுகளில் விளக்கேற்றி வரவேற்றதாக கூறப்படுகிறது.
அதே போல் மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்த நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தார். உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றி பெற்ற கிருஷ்ணன், அதேசமயம் அப்போது நரகாசுரன் இறக்கும் போது கிருஷ்ணனிடம், தான் இறக்கும் இந்த நாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது.
நரகாசுரனை அழிப்பதற்காக கண்ணன் சென்றபோது, பாணாசுரன் முதலான அசுரர்கள் பலர், திருமகளான லட்சுமிதேவியைக் கவர்ந்து வருவதற்காகப் புறப்பட்டனர். அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த லட்சுமிதேவி, அங்கே எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுரர்களின் கண்களில் படாமல் மறைந்தாள். அன்றைய நாள்தான், தீபாவளி! தீபாவளியன்று திருமகள் தன்னை தீபத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டதன் காரணமாகவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக ஏற்றி வைத்து, தீபத்தில் திருமகளை வழிபடுவதாகவும் கூறுகின்றனர்.
பீகார் மாநிலத்திலே தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னாடி தன்வந்திரி பகவானுக்கு விழா எடுக்கறார்கள். இந்த விழாவுக்கு ‘தன்தெராஸ்’ என்று பெயர்.
அதே பீகாரில் ஒரு பிரிவினர், மௌரியப் பேரரசன் சாம்ராட் அசோகன் தனது திக் விஜயத்தை முடித்து, நாடு திரும்பிய நாளாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தில், தீபாவளியன்று குபேர பூஜை செய்வதை முக்கியமானதாகக் கருதுகின்றனர். குபேரருக்கு பண கஷ்டம் வந்தபோது லட்சுமி தேவியின் கைகளால் வரத்தினை வாங்கிய நாள் இந்த ஐப்பசி மாத அமாவாசை தினம். இந்த நாளில் நாம் லட்சுமி தேவியை வணங்கினால் நமக்கும் குபேர சம்பத்து கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அன்னிக்கு செல்வத்தின் அதிபதியான குபேரனை வழிபட்டால், ஆண்டு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது என்பது நம்பிக்கை.
உத்தரப்பிரதேச மாநிலத்திலே, சீதாதேவியை மீட்ட திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் காளிதேவி வழிபாடாக ‘மகாநிசா’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அன்று புத்தாடை மற்றும் ஆபரணம் வாங்கும் வழக்கமில்லை. பெங்காலிகள் காளி பூஜை செய்கிது, சகோதர சகோதரிகளின் நலனுக்குப் பிரார்த்தனையும் "பாய் போலே" என்ற பெயரில் நடக்கிறது. கொல்கத்தாவில் தீபாவளியையொட்டி, ‘பூவாணப் போட்டி’ நடைபெறுகிறது. பூச்சட்டி கொளுத்தும்போது, எவரது வாணம் அதிக உயரத்தில் சென்று பூக்களைக் கொட்டுகிறதோ அவரே வெற்றி பெற்றவர்!
வங்காளத்தில் கிருஷ்ணன் நரகாசுரனை கொன்றபின் பூதங்களாக அசுரர்கள் வரும் நாளாக சதுர்தசி இரவை சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இதன் தொன்மையான மரபில் பார்த்தால், 14 தலைமுறை மூதாதையர்கள் பூதமாக வருவதாக சாக்த சமய ஐதீகப்படி பெங்காலிகள் நம்புகிறார்கள். இதற்கு பூத சதுர்தசி என்று பெயர். அதாவது அந்த இரவில் பேய்கள்/பூதங்கள் போன்ற உருவங்களில் மூதாதையர்கள் வருவதாக ஐதீகம். அவர்களை வரவேற்க தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள் என கூறப்படுகிறது.
உஜ்ஜயினி அரசன் விக்கிரமாதித்தன், ‘சாகாஸ்’ என்பவர்களை வென்று, வாகை சூடிய நாள் தீபாவளி என்பர்.
வாரணாசியில், ‘கார்த்திகை பூர்ணிமா’ என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுது.
ஸ்ரீரங்கத்தில் திருவரங்கநாதர் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று திருவரங்கனுக்கு விசேஷமாக `ஜாலி அலங்கார’ வைபவம் நடைபெறும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி, மேளதாளங்கள் முழங்க, நாகஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ஜாலி அலங்கார வைபவம் ஆகும்.
இதே தீபாவளி திருநாளிலேயே ஆதிசங்கரர் தனது ஞான பீடத்தை ஏற்படுத்தினாராம்.
புத்த பிரான் முக்தி அடைந்த நாளாக பௌத்தர்களும், மகாவீரர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்களும் தீபாவளி திருநாளை அனுஷ்டிக்கிறார்கள்.
பௌத்த மரபில் தீபாவளி உண்டென அயோத்தி தாசப்பண்டிதர் பாலி நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி, அன்றைய நாளில் ஆமணக்கு எண்ணெய்யில் பௌத்தர்கள் தீபமேற்றியதாக கூறுகிறார்.
மலாடபுரம் என்ற ஊரிலிருந்த பௌத்தர்கள் ஆமணக்கு விதைகளில் இருந்து எடுத்த நெய்யின் மருத்துவக் குணத்தை அறிந்தும், அது விளக்கு எரிக்கப் பயன்படுவதனை உணர்ந்தும், அதன் பயன்பாட்டைத் தம் மன்னனிடம் சொல்ல, அம்மன்னன் ஆமணக்குச் செடிகளைப் பயிரிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினான் என்றும், அண்ணாந்து என்னும் மலை உச்சியில் குழிதோண்டி, பருத்திநூல் திரிவைத்து எரிய விட்டு, அது உயிர்களுக்குத் தீங்கு செய்யாது என்பதனை ஆராய்ந்து அறிந்து, மக்களைக் கூட்டி, ஆமணக்கு நெய்யை விளக்கெரிக்கப் பயன்படுத்துமாறு கட்டளை இட்டான் என்றும் அம்மக்கள் அதன் தீமை இன்மையை உறுதிசெய்ய விரும்பி, மூன்று நாட்கள் வீட்டுக்கு வெளியில் திண்ணையிலும் தெரு மாடத்திலும் விளக்குவைத்து, பின்னர் வீட்டினுள்ளும் விளக்ககேற்றினர் என்றும் கூறியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, இது ‘கார்த்துல தீபம்’ என்று அழைக்கப்பட்டதையும், கார்த்திகை மாதத்து முழுநிலவு நாளிலே தீபமேற்றி, ஈகை அளித்துப் பகவத்தியானம் செய்தனர் என்றும் குறிப்பிடுகிறார். முழுநிலவோடு தொடர்புடையதாகச் சொல்லுவது, தமிழர் மரபை ஒட்டியுள்ளதைக் காண்க. இந்த வழக்கத்தையும், நற்றிணை 202 ஆம் செய்யுளில் வரும் ‘அறம் செய் திங்கள்’ என்ற தொடரையும் ஒப்பிட்டுக் காணலாம். அறச் செயல்களைத் தான் பௌத்தர்கள் ஈகை என்கின்றனர்.
அகநானூற்றின் 141 ஆம் செய்யுளில் நக்கீரர் சொல்வதனை இந்தக் கருத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.
‘மதிநிறைந்து அறுமீன் சேரும்
அகல் இருள்நடுநாள் மறுகு
விளக்குறுத்து மாலை நாற்றிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு.’
‘பலருடன் துவன்றி’ என்ற குறிப்பில், ஊர்மக்கள் அனைவரும் கூடி நடத்திய விழா இதுவென்பது விளங்கும். இன்றும் தமிழகத்துச் சிற்றூர்களில் ஊர்ப்பொது விழாவாகவே இது கொண்டாடப்படுகிறது. ஊரின் நடுவிடத்தில் ‘சொக்கக்பனை’ கொளுத்தப்படுகிறது. இதனைச் ‘சுவர்க்கப்பனை’ என்று விளக்கலாம். பனைமடல்களை ஒரு தேர்போலக்கட்டி அமைத்து, நல்ல நேரத்தில் அதற்குத் தீ மூட்டி வழிபடுவர். எஞ்சியுள்ள அம்மடல்களின் பகுதிகளை இல்லத்தில் வைத்துக் காப்பர். திருவண்ணாமலை தீபம் புகழ்மிக்கது.
குலு பள்ளத்தாக்கில், தீபாவளி நாளன்று ராவணனுடைய உருவினை எரித்து, ராமபிரானின் வெற்றியைக் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
இறைவனை ஒளிவடிவமாக வணங்குதலை இது குறிக்கலாம். மறம் தொலைந்து அறம் வளர்தலையும், துன்பம் நீங்கி இன்பம் பிறத்தலையும், அறியாமை நீங்கி, அறிவு தலைக் காட்டுதலையும் இருளின் நீக்கமாகவும் ஒளியின் தோற்றமாகவும் அடையாளம் காட்டி இந்நாட்டு மக்கள் விழாவெடுத்தனர் என்று அறிகிறோம்.
பன்னெடுங்காலமாகத் தமிழர் கொண்டாடி வந்த விளக்கீட்டு விழாவோடு, கி.பி. 15 ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் புகுந்த வடநாட்டு விளக்கீட்டு விழாவையும் சேர்த்துக் கொண்டாடும் நிலை தோன்றியுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை இந்து சமயத்தைச் சார்ந்த பல்வேறு மதங்களான, சமண, சீக்கிய மதத்தினரும் வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறனர். தீபாவளி என்றாலே அது ஐப்பசி மாதம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமே வந்ததுண்டு.
சீக்கியர்களின் தீபாவளி: 1577- இல் இத்தினத்தில், தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர். அதுமட்டுமின்றி சீக்கியர்களும் தங்களது குரு கோபிந்த் சிங் (Guru Har Gobind) விடுதலை பெற்ற நாளைக் கொண்டாட பொற்கோவில் வரை விளக்கேற்றி வழிபடும் வழக்கமும் உண்டு.
எமதர்மராஜன், நசிகேதனுக்கு உயிர்ப் பிச்சை அளித்ததும் சாவித்திரிக்கு புத்திர வரம் தந்து சத்தியவானை உயிர்ப்பித்ததும் தீபாவளி நாளில் நிகழ்ந்ததாகக் கொண்டாடுகின்றனர் பஞ்சாப் மக்கள்.
புராண இதிகாசங்களிலும் சாஸ்திர நூல்களிலும் தீபாவளி பற்றிய பல தகவல்கள் உண்டு.
சிவபெருமானின் திருவருளை உணர்ந்து இருபத்தொரு நாட்கள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனுடன் பராசக்தி இணைகிறார். இந்த விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதியை சக்தியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவமெடுக்கிறார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நாளினை தீபாவளி என ஸ்கந்தபுராணம் கூறுகிறது.
வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.
விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பவிஷ்யோத்ர புராணம் தீபாவளி என்றும்; காமசூத்ரா கூராத்ரி எனவும்; கால விவேகம், ராஜமார்த்தாண்டவம் ஆகிய நூல்கள் சுபராத்ரி என்றும் சுக்ராத்ரி எனவும் தீபாவளியைக் குறிப்பிடுகின்றன.
சந்திர குப்த விக்ரமாதித்தன் தீபாவளி திருநாள் அன்று அரியணை அமர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது.
சக்ரவர்த்தி ஹர்ஷர் ஏழாம் நூற்றாண்டில் எழுதிய தமது “நாகானந்தம்” என்கிற நூலில் “தீபப்ரதிபனு ஸ்தீவம்” என்ற பண்டிகை தீபாவளி மற்றும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் பற்றியும் அன்றையதினம் புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஏழாம் நூற்றாண்டு காஷ்மீரத்து நூல் “நீலமேக புராணம்”, தீபோத்ஸவம் என்கிறது புத்தாடை அணிந்து ஒளிவிளக்கு ஏற்றி கொண்டாடுவது என்கிறது.
ஷாஜஹான், தீபாவளித் திருநாளில் சமபந்தி போஜனம் அளித்து, வாணவேடிக்கைகள் நிகழ்த்திக் கொண்டாடியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
கி. பி. 15 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு புதிய பண்டிகை போலத் தோற்றமளிக்கும் தீபாவளி உண்மையில் பழந்தமிழ் மக்கள் கொண்டாடிய விளக்கீட்டிலிருந்து தோன்றியிருக்கலாம் என்ற அறிஞர் அயோத்திதாசர் கருத்து ஏற்கத்தக்கது.
ஆசியாவிலேயே தீபாவளிதான் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகை. வணிக தொடர்பின் போது இந்தியாவிலிருந்து சென்ற பல வாணிகர்கள் இடம்பெயர்ந்த நாட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். இப்படி பல தேசங்களுக்கும் பரவி உள்ளது தீபாவளி. இப்போது கூட இந்தியா மட்டுமின்றி, இலங்கை, நேபாளம், மியான்மர்,சிங்கப்பூர், மலேசியா, பிஜி, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் தீபாவளியை மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை, திரயோதசி, சதுர்த்தசி, பிரதமை ஆகிய நான்கு நாட்களும் தீபாவளியோடு தொடர்பு கொண்டவை. வடமாநிலங்களில் அமாவாசை, பிரதமையிலும் தென் மாநிலங்களில் திரயோதசி, சதுர்த்தசியிலும் தீபாவளி கொண்டாடுகின்றனர்.
பொதுவாக ஐப்பசி மாதம் பனி நிறைந்த மாதம். இல்லம் தோறும் குளிர் அதிகமாக அண்டும் காலம். இருள் கூடும் காலம் என்றும் இதைக் கூறலாம். அந்தக் காலகட்டத்தில் ஒளியை பெருக்கி உஷ்ணத்தை வீடுகளில் உருவாக்க இந்தப் பண்டிகையை மக்கள் கடைப்பிடிக்க தொடங்கி இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
விளக்கொளி ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள்(Festival of Lights) இந்தியாவிற்கு மட்டும் உரியதன்று. உலகில் பலநாடுகளில் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள் வழக்கத்தில் உள்ளன. இவ்விழாக்களுக்கிடையேயான ஒற்றுமைகள் என்னவென்று நோக்கினால், இவையாவும் புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகள் என்பதும், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுவது புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ளபகுதியின் குளிர்காலத்துடன் (winter solstice - அதாவது நவம்பர்,டிசம்பர், ஜனவரி மாதங்களில்) தொடர்புடையவை என்பதுமாகும். இரவு நீண்டுவிடும் காலத்தில் விளக்கொளிகள் தரும் அழகிற்காகவும் இவை கொண்டாடப் பட்டிருக்கக் கூடும்.
உலகநாடுகளில் குளிர் காலத்தில் கொண்டாடப்படும் விளக்கொளி விழாக்கள் சில:
கிறிஸ்துமஸ் - உலகெங்கும் (Christmas)
யூதர்களின் ஹனூக்கா பண்டிகை (Jewish Festival of Lights Hanukkah)
குவான்சா - ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் (Kwanzaa - African)
செயிண்ட் லூசியா நாள் - சுவீடன் (St. Lucia's Day - Sweden)
ஹாக்மானே - ஸ்காட்லாந்து (Hogmanay - Scotland)
தசங்காடய்ங் - மயன்மார் (The Tazaungdaing Festival - Myanmar)
செயிண்ட் மார்ட்டின் டே - ஹாலந்து (St. Martin's Day - Holland)
லோய் குர்தாங் - தாய்லாந்து (Loi Krathong - Thailand)
லியோன் - ஃபிரான்ஸ்(Lyon - France)
இவையாவும் ஏதோ ஒரு வகையில் தீமை ஒழிந்து நன்மை மேலோங்கிய நாளாகவோ, வெற்றித் திருநாளாகவோ, ஒரு புதிய தொடக்கமாகவோ, அறியாமை நீங்கும் நாளாகவோ கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒளியில் இருள் நீங்குவது அறியாமை நீங்கி அறிவு பெறுவதுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் உளவியல் அடிப்படையில், குளிர் காலத்தில் பகல்பொழுது குறுகியும் இருண்டும் இருக்கும் நாட்களில் சிலர் மனச்சோர்வு நிலைக்கு (Seasonal affective disorder - SAD) ஆட்படுவது வழக்கம். அப்பொழுது தங்களை நிலைப்படுத்திக்கொள்ள அதிகம் உணவை நாடுவதும் வழக்கம். மனச்சோர்வுக்கு மருந்தாக உணவு உண்ணுவது, போதைப்பொருட்களை மூளை எவ்வாறு கையாள்கிறதோ அதே அடிப்படையிலேயே இயங்கச் செய்கிறது என்று கூறுகிறது அறிவியல். பண்டிகை என்பது விதம் விதமாக சமைத்துண்ணும் வாய்ப்பை வழங்குகிறது என்பதால் குளிர் காலங்களில் அவற்றின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கொள்ளலாம்.
பொதுவாக நரகாசுர வதம் என்பது தத்துவ ரீதியாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
இது புராணக் கதையாகி நூறு வருடங்களுக்குள் தான் இருக்கும். ஆனால் உண்மையில் மனித
மனமாகிய சொர்க்கத்தில் ஏற்றப்பட வேண்டிய ஞானதீபம் ஆனது நரகமான சிந்தனைகளால் மனித கொடூரச் செயல்களால் நிறைவேறாத ஒன்றாக இருக்கிறது. கொடிய குணங்கள் என்னும் அசுரர்களால் மனித மனம் இருளடைந்து காணப்படுகிறது. அந்த இருள் அகன்று மனத்தில் ஒளி வீச வேண்டும். உள்ளொளியை மனிதம் கண்டு அனுபவிக்க வேண்டும். ஆகவே கொடூர குணங்களாகிய நரகத்திலிருந்து விடுதலை பெற வேண்டியே நரகத்தை ஒழிக்கும் தினமாக மனித மனதில் ஞான தீபம் ஏற்றிக் கொள்ளும் நாளாக அனுசரிக்கப்பட்டது நாளடைவில் நரகாசுரனாக மாறி விட்டது.
இப்படி பெரு மகிழ்வு தரக் கூடிய ஒரு திருநாளாக அதை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் விதமாக அவரவர்களுக்கென்று ஒரு வித காரண காரியங்களை தொகுத்து பகுத்து கூறிவருகின்றனர் அவ்வளவே.
புராணங்கள் கூறும் கருத்தை மக்கள் மறக்காமல் இருக்கவே வருடம் தோறும் ஏதோ ஒருவிதத்தில், ஒரு பண்டிகையின் வடிவில் இந்து மதத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் தீபாவளி பண்டிகை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்துமதத்தின் பல உட்பிரிவினரும், பௌத்தரும், சீக்கியரும் என்று பற்பல சமயப்பின்னணி கொண்டவரும் குளிர் காலத் துவக்கத்தில் விளக்கேற்றிக் கொண்டாட விரும்பும் ஒரு பண்டிகையாக தீபாவளி சமய எல்லைகளைக் கடந்த விழாவாக மாறிவிட்டிருக்கிறது. உலகில் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இந்தியர்களின் பலதலைமுறையினரும் கொண்டாட, இன்று உலகில் பலநாடுகளில் கொண்டாடும் நிலையை எட்டி இந்தியப் பண்டிகை என்றால் தீபாவளி என்ற பொதுத்தன்மையையும் அடைந்துவிட்டது.
இவை அனைத்தையும் எண்ணிப் பார்க்கையில், கார்த்திகை என்ற விளக்கீட்டு விழாவை, சைவர், வைணவர், சமணர், பௌத்தர் என்கிற அனைவரும் தமக்கே உரிய வகையில் கொண்டாடி வருவதனை அறியலாம்.
இவ்வகையில் இது தேசிய விழாவாகும். இருள் தீமைக்கு அறிகுறி; ஒளி நன்மைக்கு அறிகுறி. உலகில் தீமைகள் அடியோடு நீங்கி எல்லோரும் இன்புற்றிருக்க நன்மைகள் பெருகவேண்டும் என்பதனையே இவ்விழா குறிக்கிறது என்று அறியவேண்டும்.
அந்த வகையில் இந்தியப் பண்டிகைகளில் மிக உயர்ந்த பண்டிகைதான் தீபத் திருநாள் தீபாவளிப் பண்டிகை. இந்தியப் பண்டிகையின் முக்கிய நோக்கமே அகத்திலும், புறத்திலும் உள்ள கெட்ட எண்ணங்களை விட்டு விட்டு, தூய்மையான எண்ணத்துடன் மனித மனம் புத்தொளி பெற வேண்டும் என்பதே. தீய எண்ணங்கள்தான் (நரகன்) நரகாசுரன் என்ற அசுரன். அவன் குடியிருக்கும் இடமே மனித உடல். இந்த மாயாவியை அழித்து, ஆத்ம ஒளியாகத் திகழ்வதே தீபாவளி''. எனவே தீய வழிக்கு இழுத்துச் சென்று கொடுமைப்படுத்தும் காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய ஆறுவகை அசுரக் குணங்களையும் அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்ட தீப ஒளியை வரிசையாக ஏற்றி வைத்துவழி வழியாக கொண்டாடுவோம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
தீபாவளியும் கார்த்திகையும் – ஒரு வரலாற்றுப் பார்வை, புதிய பனுவல்: An International Journal of Tamil Studies, Vol I, Issue 4, November 2009,Pages 41 – 48, அ. தட்சிணாமூர்த்தி
kungumam.co.in/
/groups.google.com/g/mintamil/c/S_Q2SNgqeFA
oredesam.in/deepavali-is-a-northern-festival/
www.vikatakavi.in/magazines/127/4423/இருளை-நீக்கி-ஒளியைத்-தரும்-தீபாவளி-ஆரூர்-சுந்தரசேகர்.php
www.aanthaireporter.com/deepavali-festival-why-how-whenwhere/amp/
Comments
Post a Comment