சமூக ஒற்றுமையைச் சிதைக்கும் சக்திகளை எச்சரிக்கையுடன் எதிர்கொள்வோம்
வெறுப்பு, பொறாமை, ஆற்றாமை, சுயநலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவருக்குள் உருவாகும் அதிருப்தியை, அல்லது அவருடைய தனிப்பட்ட நலனிலிருந்து உருவான கருத்துகளை, பொது கருத்தாகக் கட்டமைக்க சிலர் திட்டமிட்ட செயல் திட்டங்களை முன்னெடுப்பார்கள். பல்வேறு கருத்துகளை முன்வைத்து, தங்களை நியாயத்தின் முகமாகக் காட்ட முயற்சிப்பார்கள்.
எப்போதும் நச்சுத் தன்மை கொண்ட விலங்குகளிடம் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதுபோல,
“நான்தான் எல்லாமே” எனும் அகந்தையுடன் செயல்படும் நபர்களிடமும்,
தனது சுயநலமே உலகம் என நினைக்கும் மனிதர்களிடமும்
நாம் அதே அளவிலான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
இவர்கள் நியாயம், நீதி, உரிமை ஆகியவற்றைப் பேசுவது போல பேசிக் கொண்டு,
உண்மையில் ஒரு உயர்ந்த நோக்கத்தைச் சிதைப்பார்கள்.
அமைப்பாய் திரள்வதைத் தடுப்பார்கள்.
ஒற்றுமையை சீர்குலைப்பார்கள்.
தங்களது தனிப்பட்ட தேவையை அடைவதற்காக கலைப்புவாதத்தில் ஈடுபடுவார்கள்.
சமூக ஒற்றுமையைச் சிதைக்கும் இத்தகைய சக்திகளை அடையாளம் காண்பது எளிதல்ல.
ஆனாலும், நாம் நமது அறிவையும் அரசியல் அனுபவத்தையும் மிக நுட்பமாகப் பயன்படுத்தி,
அவர்களை அடையாளம் காண முயற்சிக்க வேண்டும்.
ஒரு இயக்கமாக இருந்தாலும்,
ஒரு சமூகமாக இருந்தாலும்,
ஒரு ஊராக இருந்தாலும்,
தங்களது நலனுக்காக அதை அழிக்கவும் தயங்காதவர்கள் இவர்கள்.
உயர்ந்த நோக்கங்களைச் சிதைக்கவும்,
சமூக விடுதலையின் பாதையைத் தடுக்கவும் முயல்பவர்கள்.
சொந்த சமூகத்திலேயே பிறந்த இப்படிப்பட்ட சக்திகள்தான்,
சமூக விடுதலைக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டைகளாக நிற்கிறார்கள்.
நாம் நமது கட்சியின் அல்லது இயக்கத்தின் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் போது,
இத்தகைய சக்திகள் பல வேடங்கள் தரித்து நம்மை ஏமாற்ற முயற்சிப்பார்கள்.
நமது பணியைச் சிதைக்கவும், தடுக்கவும் பல வழிகளில் செயல்படுவார்கள்.
அவர்களைப் பற்றி அளவுக்கு மீறிக் கவலை கொள்ளாமல்,
நாம் நமது குறிக்கோளை நோக்கி தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.
அப்படி தொய்வில்லாமல் செயல்படும் போது,
நாம் உயிரென நேசிக்கும் தலைவரையே நமக்கு எதிராக நிறுத்த முயற்சிப்பார்கள்.
தலைவரிடம் சென்று அவதூறுகளைப் பரப்புவார்கள்.
அந்த நேரத்தில் நாம் மிகத் தெளிவாக,
மக்களிடம் – மக்களுக்காக – மக்களின் விடுதலைக்காக
நமது களப்பணியைத் தொடர வேண்டும்.
தலைவர் காலப்போக்கில் அவதூறு செய்பவர்களை தானாகவே அடையாளம் கண்டு விடுவார்.
எனவே, விளக்கம் கேட்காமல் பதில் சொல்லக் கூடாது.
நமது கோட்பாட்டில் உறுதியாக நின்று,
மக்களுக்காகப் பணியாற்றுவதே சரியான பதிலாகும்.
பலவீனமான மனநிலையுடையவர்களிடம் அதிகாரம் சென்றால்,
அந்த அதிகாரத்தை அவர்கள் சமூக நலனுக்குப் பயன்படுத்த மாட்டார்கள்.
அதனை காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.
ஆகவே,
அப்படிப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு,
அரசியல் புரிதல் உள்ள,
கொள்ளை கோட்பாட்டில் உறுதியாக நின்ற,
அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவர்களிடமே
அதிகாரம் செல்ல வேண்டும்.
பிறரின் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதும்
மனிதநேயமிக்க தோழர்களுக்கே
அமைப்பின் அதிகாரமாக இருந்தாலும் சரி,
அரசியல் அதிகாரமாக இருந்தாலும் சரி,
அதை ஒப்படைக்க வேண்டும்.
இப்படிப்பட்ட நபர்களையே நாம் தேர்வு செய்ய வேண்டும்.
அதுவே சமூக விடுதலையின் பாதை.
இவண்:-
ஞானம் மு.அறிவுடைநம்பி
வழக்கறிஞர்
கடலூர்-1
Comments
Post a Comment