உலகத் தாய்மொழி் நாள்
மொழி என்பது ஒரு இனத்தின் உயிர்
பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1999 ஆம் ஆண்டு UNESCO அறிவித்த இந்த நாள், 1952 ஆம் ஆண்டு மொழி உரிமைக்காக போராடிய மாணவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் உருவானது.
மொழி என்பது வெறும் தொடர்பாடல் கருவி அல்ல, அது ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, உணர்வு, சுயமரியாதை மற்றும் அரசியல் அடையாளத்தின் உயிர்நாடி.
தமிழ்நாடு அரசு உலகத் தாய்மொழி நாளை சிறப்பாகக் கடைபிடிப்பது பாராட்டத்தக்கது. இது ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, தாய்மொழி மீதான அரசியல் மற்றும் பண்பாட்டு பொறுப்புணர்வின் வெளிப்பாடு.
தாய்மொழியில் கல்வி, நிர்வாகம், நீதித்துறை, அறிவியல் ஆகியவை வளர வேண்டும் என்ற எண்ணமே உண்மையான மொழிப் பாதுகாப்பு.
ஒரு மொழியை அழித்து மற்றொரு மொழியை நிறுவுவது எந்த ஜனநாயக அரசுக்கும் ஏற்ற செயலல்ல. மொழி திணிப்பு என்பது சமூக விரிசலை ஏற்படுத்தும் அபாயகரமான நடைமுறையாகும்.
ஒரே மதத்தைப் பின்பற்றிய (Pakistan) பாகிஸ்தான் கூட மொழி உரிமை மறுக்கப்பட்டதன் விளைவாக 1971 இல் பிளவுபட்டு பங்களாதேஷ் (Bangladesh) உருவானது. இந்த வரலாறு மொழியின் அரசியல் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்திய ஒன்று.
இந்தியா பல மொழிகள், பல இனங்கள், பல பண்பாடுகள் இணைந்து வாழும் கூட்டாட்சி நாடாகும். ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்தியாவில் ஏறத்தாழ 1500-க்கும் மேற்பட்ட மொழிகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன.
இந்நிலையில் மீதமுள்ள மொழிகளைப் பாதுகாப்பதே அரசின் கடமை.
ஒரு மொழியை உயர்த்துவது மற்ற மொழிகளைத் தாழ்த்தும் முயற்சியாக இருக்கக் கூடாது.
இந்த மொழிப் பல்வகைமையை அங்கீகரித்து பாதுகாக்கும் அடிப்படை ஆவணம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் (Constitution of India) ஆகும்.
அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணை பல மொழிகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறது, மாநிலங்களுக்கு தங்கள் மொழியில் ஆட்சி நடத்த உரிமை வழங்குகிறது.
எனவே, மொழி பாதுகாப்பிற்கான ஜனநாயகப் பாதை இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதே.
தமிழ் உலகின் பழமையான உயிர்மொழிகளில் ஒன்று. அதை காப்பது தமிழரின் பொறுப்பு மட்டுமல்ல, மொழி பல்வகைமையை மதிக்கும் ஒவ்வொருவரின் கடமை.
அதே நேரத்தில், அனைத்து தாய்மொழிகளும் சம மதிப்புடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. மொழி உரிமை என்பது மனித உரிமையின் ஒரு அங்கமாகும்.
உலகத் தாய்மொழி நாளில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி ஒன்று தான் எந்த மொழியும் திணிக்கப்படக் கூடாது, எந்த மொழியும் அழியக் கூடாது.
ஒவ்வொரு குழந்தையும் தன் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமை பெற வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்கள் மொழியில் சிந்தித்து, பேசி, படித்து , முன்னேறும் சூழல் உருவாக வேண்டும்.
வன்முறையல்ல, விழிப்புணர்வே எமது ஆயுதம்.
அரசியலமைப்பே எமது பாதுகாப்புக் கேடயம்.
வாழ்க ஒவ்வொருவரின் தாய்மொழியும்!
அன்னைத் தமிழை காப்போம்.! அனைத்து மொழிகளையும் மதிப்போம்..!!
இவண்
வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர்
(கடந்த ஆண்டு பதிவு இது,
தற்போது மீள் பதிவு )
Comments
Post a Comment