பதவி அல்ல கொள்கையே வெற்றி
பதவியைப் பிடிப்பது வெற்றி அல்ல.
அது அரசியல் பயணத்தின் ஒரு நிலை மட்டுமே, சமூக மாற்றத்தின் அளவுகோல் அல்ல. சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற போராட்டத்தில், கொள்கை சிதையாமல் வாழ்வதும், அதிகாரச் சமரசங்களுக்குள் கரைந்து போகாமல், நீதிக்காகத் தொடர்ந்து நிற்பதும் தான் உண்மையான அரசியல் வெற்றி. பதவிகள் கைமாறும், அதிகாரம் காலத்தோடு அழியும். ஆனால் கொள்கையை இழந்த அரசியல் வரலாற்றில் எதையும் மாற்றியதில்லை. அதிகாரத்தை நோக்கி ஓடும் அரசியல் ஒடுக்குமுறைக்கு புதிய முகம் கொடுக்கலாம் ஆனால் சமரசமின்றி போராடும் அரசியல் மட்டுமே சமூக மாற்றத்தின் பாதையை திறக்கிறது.
இந்த அடிப்படை உண்மை தான் இன்றைய அரசியலில் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. சமூக மாற்றம் என்ற பெயரில் நடைபெறும் பல அரசியல் பயணங்கள், உண்மையில் பதவி, அதிகாரம், வளங்களை கைப்பற்றும் போட்டியாக மட்டுமே மாறிவிட்டன. கொள்கை என்பது தேர்தல் கால முழக்கமாகச் சுருங்கி, அதிகாரம் கிடைத்தவுடன் சமரசத்தின் முதல் பலியாக மாற்றப்படுகிறது. சமூக நீதியைப் பேசும் அரசியலே, அதிகாரப் பகிர்வு என்ற தருணத்தில் மௌனமாகி விடுகிறது. இதன் விளைவாக, அரசியல் என்பது மக்களை விடுவிக்கும் கருவியாக இல்லாமல், மக்களை நிர்வகிக்கும் அமைப்பாக மாறுகிறது.
இந்த இடத்தில்தான் வளப் பகிர்வு என்ற கேள்வி தவிர்க்க முடியாததாக எழுகிறது. சமூக மாற்றம் உண்மையிலேயே நடந்ததா என்பதை அளப்பதற்கான சரியான அளவுகோல், எத்தனை பேர் பதவியில் இருக்கிறார்கள் என்பதல்ல, நிலம், கல்வி, வேலை, அரசுத் திட்டங்கள், முடிவு எடுக்கும் அதிகாரம் போன்ற வளங்கள் யாரிடம் எவ்வளவு பகிரப்பட்டுள்ளன என்பதே. அதிகாரம் சில சமூகங்களிடம் மட்டும் குவிந்து, பெரும்பான்மையான சமூகங்கள் வாக்குகளாக மட்டுமே பயன்படுத்தப்படுகிற சூழலில், சமூக நீதி பேசுவது வெறும் அரசியல் நடிப்பாகவே மாறுகிறது.
பட்டியல் பூர்வ குடிகளின் அரசியல் அனுபவம் இதற்கான தெளிவான சாட்சியாக உள்ளது. தேர்தல் அரசியலில் அவர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தாலும், வளங்கள் பகிரப்படும் தருணங்களில் அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். அரசியல் தலைமை, கொள்கை நிர்ணயம், நிர்வாக அதிகாரம் போன்ற இடங்களில் அவர்களின் பங்கேற்பு குறைக்கப்படுகிறது. இதனால் அரசியல் என்பது அவர்களுக்கு அதிகாரம் பெறும் வழியாக இல்லாமல், பிற சமூகங்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் கருவியாக மட்டுமே செயல்படுகிறது.
அரசியல் அதிகாரத்தை மையமாக்காத வரை, எந்த அடையாள அரசியலும் பட்டியல் இன மக்களுக்கு விடுதலை தராது. மொழி, இனம், பண்பாடு ஆகியவை உணர்ச்சி எழுச்சியை உருவாக்கலாம், ஆனால் வளப் பகிர்வில் நேரடி பங்கு இல்லாவிட்டால், அந்த எழுச்சி இறுதியில் ஏமாற்றமாகவே முடியும். அதனால் தான், சமூக மாற்றத்தை விரும்பும் எந்த அரசியலும், “யார் அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறார்கள்?” மற்றும் “வளங்கள் யாரிடம் குவிகின்றன?” என்ற கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இன்றைய அரசியல் சூழலில் பட்டியல் பூர்வ குடிகளுக்கு தேவைப்படுவது இன்னொரு உணர்ச்சி முழக்கம் அல்ல, இன்னொரு வாக்குறுதியும் அல்ல. தேவைப்படுவது அரசியல் அதிகாரம் குறித்த தெளிவான சிந்தனையும், வளப் பகிர்வை மையமாகக் கொண்ட அரசியல் நோக்கமும் தான். பதவிகளை அளவுகோலாகக் கொண்ட அரசியல், அவர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றிக் கொண்டே இருக்கும். ஆனால் கொள்கையை மையமாக வைத்து, சமரசமின்றி அதிகாரப் பகிர்வை கோரும் அரசியல் மட்டுமே நீடித்த சமூக மாற்றத்தை உருவாக்க முடியும்.
அரசியல் என்பது யார் நம்மோடு பேசுகிறார்கள் என்பதல்ல, யார் நம்மோடு அதிகாரத்தையும் வளங்களையும் பகிர்கிறார்கள் என்பதே அதன் உண்மையான அளவுகோல். சமூக மாற்றம் என்பது பதவிகளால் அளக்கப்பட வேண்டியதல்ல. கொள்கை சிதையாமல், சமரசமின்றி, அதிகாரத்தின் மையத்தை நோக்கி தொடரும் போராட்டமே உண்மையான அரசியல் வெற்றி.
இவண்;-
ஞானம் மு.அறிவுடை நம்பி
வழக்கறிஞர்
மீள் பதிவு
Five years ago
Comments
Post a Comment