சூத்திரர் அரசியல்: எதிர்ப்பின் மொழியும் அதிகாரத்தின் நோக்கமும்
தமிழக அரசியல் வரலாற்றில் சூத்திர அரசியல் என்பது தற்செயலாக உருவான ஒன்று அல்ல. அது காலப்போக்கில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட, தந்திரங்களால் நிரம்பிய அதிகார அரசியல். அதன் மைய நோக்கம் எப்போதும் ஒன்றே பிராமண சமூகத்திற்குச் சமமான சமூக அந்தஸ்து, பொருளாதார வலிமை மற்றும் அரசியல் அதிகாரத்தை அடைவது.
இந்த இலக்கு தான் சூத்திர அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையும், அதன் தலைவர்களின் பேச்சுகளையும், அரசியல் நிலைப்பாடுகளையும் தீர்மானிக்கிறது. வெளிப்படையாக அவர்கள் எதிர்ப்பின் மொழியை பேசினாலும், மறைமுகமாக அதிகார அமைப்புகளுக்குள் தங்களை நிலைநிறுத்துவதிலேயே முழு கவனம் செலுத்துகிறார்கள்.
சூத்திர அரசியலின் முக்கிய தன்மை அதன் இரட்டை வேடத்தில்தான் இருக்கிறது. அதிகாரத்தை அடைவதற்காக அவர்கள் ஒரே நேரத்தில் எதிர்ப்பாளர்களாகவும், ஆதரவாளர்களாகவும் செயல்படுகிறார்கள். பிராமணியத்தை விமர்சிப்பார்கள், ஆனால் அதே பிராமணிய அதிகார கட்டமைப்புக்குள் நுழைய எந்த தயக்கமும் காட்டமாட்டார்கள். இந்துத்வத்தை எதிர்ப்பதாக பேசுவார்கள், ஆனால் அதன் சமூக அடித்தளத்தை பலப்படுத்தும் அரசியல் செயல்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடுவார்கள். முதலாளித்துவத்திற்கு எதிரான முழக்கங்கள் மேடைகளில் ஒலிக்கும், ஆனால் அரசியல் நடைமுறையில் முதலாளித்துவமே அவர்களது முதன்மை கூட்டாளியாக மாறுகிறது.
பொதுவுடைமை, சமத்துவம், சமூக நீதி போன்ற உயரிய கருத்துக்கள் சூத்திர அரசியலில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை மனித விடுதலைக்கான அடிப்படை கொள்கைகளாக அல்ல, அரசியல் ஆதாயத்திற்கான கருவிகளாகவே பெரும்பாலும் செயல்படுகின்றன. அதிகாரப் பகிர்வு குறித்து பேசும் தருணத்தில், இந்தக் கொள்கைகளே “அரசியல் சாத்தியமின்மை” என்ற பெயரில் நிராகரிக்கப்படுகின்றன. சமத்துவம் பேசப்படும் இடங்களிலேயே சமத்துவம் மறுக்கப்படும் அரசியல் யதார்த்தம் இதுவே.
மொழி, இனம், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி போன்ற கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் பெரும் உணர்ச்சி மதிப்பைக் கொண்டவை. சூத்திர அரசியல் இந்த உணர்ச்சிகளை மிக நுட்பமாக கையாள்கிறது. இக்கருத்துக்கள் மனித சமத்துவத்திற்கான போராட்டக் கோட்பாடுகளாக அல்ல, சூத்திர சமூகத்தின் அரசியல் முன்னேற்றத்திற்கான உத்திகளாக மாற்றப்படுகின்றன. மொழி மற்றும் இன அடையாள அரசியல், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டு, அதன் வழியாக அரசியல் ஆதிக்கம் கட்டமைக்கப்படுகிறது.
“இந்த அரசியல் பஞ்சமர்களுக்கானது”,
“இது தொல் தமிழர்களுக்கான போராட்டம்”
என்ற வாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. இவை முதற்கண் விடுதலைக்கான முழக்கங்களாக தோன்றினாலும், அதிகாரத்தின் இறுதி கட்டத்தில் நிகழும் உண்மை வேறுபட்டதாக உள்ளது. அதிகாரம் பகிரப்படும் இடங்களில், சூத்திர சமூகத்தின் அனைத்து அரசியல் பிரிவுகளும் ஒன்றிணைந்து நிற்பதும், அதில் இருந்து திட்டமிட்டு விலக்கப்படுவது பட்டியல் பூர்வ குடிகள் மட்டுமே என்பதும் மறைக்க முடியாத யதார்த்தம்.
இந்த அரசியல் கட்டமைப்பின் மிகப் பெரிய பாதிப்பு பட்டியல் இன மக்கள்மீதே விழுகிறது. அவர்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் மையக் கேள்வியாக மாற்றாமல், அடையாள அரசியல் மற்றும் உணர்ச்சி அரசியலில் சிக்கவைக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக அவர்கள் தேர்தல் காலங்களில் பயன்படும் கூட்டமாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள், ஆனால் அதிகாரப் பதவிகள், கொள்கை நிர்ணயங்கள், வளப் பகிர்வுகள் என்ற இடங்களில் அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்.
பிற சமூகங்கள் நீண்டகால அரசியல் திட்டங்களை வகுத்து அதிகாரத்தை கைப்பற்றும் போது, அதன் விலையை மட்டும் செலுத்தும் சமூகமாக பட்டியல் பூர்வ குடிகள் மாற்றப்படுகிறார்கள். அரசியல் என்பது யார் நம்மோடு பேசுகிறார்கள் என்பதல்ல, யார் நம்மோடு அதிகாரத்தைப் பகிர்கிறார்கள் என்பதே அதன் உண்மையான அளவுகோல். இந்த அடிப்படை உண்மையை உணராமல் போனால், எந்த மொழி அரசியலும், எந்த இன அரசியலும் பட்டியல் இன மக்களுக்கு விடுதலையை தரப்போவதில்லை.
இன்றைய அரசியல் சூழலில் தேவைப்படுவது இன்னொரு உணர்ச்சி முழக்கம் அல்ல. தேவைப்படுவது அரசியல் அதிகாரம் குறித்த தெளிவான சிந்தனை. பட்டியல் பூர்வ குடிகள் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து, அதிகாரம், பிரதிநிதித்துவம், வளப் பகிர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட அரசியலுக்கு நகராத வரை, சூத்திர அரசியலின் தந்திரங்கள் அவர்களை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருக்கும்.
இந்த உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் தான், எதிர்கால அரசியல் விடுதலையின் முதல் படியாக இருக்கும்.
இவண்:-
ஞானம் மு.அறிவுடைநம்பி
வழக்கறிஞர்
மீள் பதிவு
Comments
Post a Comment